டி.எஸ்.பி. அலுவலகம் முன் பார் உரிமையாளர் தற்கொலை: திருப்போரூர் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்
மாமல்லபுரத்தில் டி.எஸ்.பி. அலுவலகம் முன் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். குற்றம்சாட்டப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர், அதிகாரிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
மாமல்லபுரம்,
நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 37). காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் தண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், டாஸ்மாக் பார்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வந்தார்.
பார் நடத்தியதில் கோடிக்கணக்கான பணத்தை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். மேலும் போலீசார் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் நெல்லையப்பனுக்கு 60 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. வட்டிக்கு கடன் கொடுத்த கந்துவட்டிக்காரர்கள் கொடுத்த பணத்தை கேட்டு அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த நெல்லையப்பன் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று முன்தினம், அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் லஞ்சம் வாங்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்க வந்துள்ளார். ஆனால் புகார் மனுவை போலீசார் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் லஞ்ச பணம் 50 ஆயிரத்தை வீசிவிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி நெல்லையப்பன் தீவைத்துக்கொண்டார். தீயில் கருகிய அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக முகநூலில், எந்தெந்த போலீசார் மாதா, மாதம் லஞ்சம் வாங்கி தன் வாழ்க்கையை சீரழித்து தற்கொலை முடிவிற்கு தள்ளினர் என்ற விவரத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் பார் உரிமையாளர் தற்கொலை தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் சம்பவம் நடந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலக வளாகத்திற்கு நேற்று வந்து விசாரணை நடத்தினார். அப்போது நெல்லையப்பன் 3 தண்ணீர் கேன்களில் பெட்ரோல் கொண்டு வந்துள்ளார். அதில் ஒரு கேனில் உள்ள பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துள்ளது தெரிய வந்தது. அதுகுறித்த தடயங்களும் சேகரிக்கப்பட்டன.
மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
மேலும் தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி ஆகியோரிடம் அறிக்கை பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தற்கொலை வழக்கில் நெல்லையப்பன் குற்றம் சாட்டிய திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற காவல் துறை அதிகாரிகள், அ.தி.மு.க. பிரமுகர் குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே அனுமதி இன்றி இயங்கியதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் நடத்தி வந்த தையூர், கேளம்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அய்யாவு ‘சீல்’ வைத்தார்.
இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நெல்லையப்பன் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சொந்த ஊருக்கு உடலை கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story