கோட்டக்குப்பம் அருகே, லாரி மீது கார் மோதல், கணவன்-மனைவி பலி, மகன், மகள் உள்பட 5 பேர் பலத்த காயம்
கோட்டக்குப்பம் அருகே லாரி மீது கார் மோதியவிபத்தில் கணவன், மனைவி பலியானார்கள். அவர்களது மகன், மகள் உள்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கோட்டக்குப்பம்,
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது51). இவர் தனது மனைவி ஸ்ரீதேவி (50), மகன் வெங்கடேஷ் (16), மகள் அபூர்வா (18) ஆகியோருடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் புறப்பட்டார். காரை வேளச்சேரியை சேர்ந்த டிரைவர் சாரதி (41) ஓட்டினார். இவர்களது கார் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் சென்ற போது அவர்களுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் குறுக்கே வந்த மாடு மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டனர். இதனால் அவர்கள் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தனர்.
இதைப்பார்த்ததும் அவர்களுக்கு பின்னால் காரை ஓட்டி வந்த சாரதி அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது புதுச்சேரியில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற லாரி மீது அந்த கார் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த சாரதி, காரில் வந்த ஸ்ரீதரன், அவருடைய மனைவி ஸ்ரீதேவி, மகன், மகள் பலத்த காயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள் சரிந்து விழுந்ததில் புதுச்சேரி குறிஞ்சிநகரை சேர்ந்த பரமஜோதி (36), கார் மீது மோதிய லாரி டிரைவர் பார்த்தசாரதி ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த பயங்கர விபத்தை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரும் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்களும் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்ரீதரன், அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகியோர் பரிதாபமாக செத்தனர்.
அவர்களின் மகன் வெங்கடேஷ், மகள் அபூர்வா, லாரி டிரைவர் பார்த்தசாரதி, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பரமஜோதி ஆகிய 4 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story