திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது
திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
திருச்சுழி,
திருச்சுழியை அடுத்த ஆலடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல் மரிய செல்வகுமார்(வயது53). அ.தி.மு.க. பிரமுகரான இவர் திருச்சுழியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆலடிபட்டியில் கல் குவாரி நடத்தி வந்தார். சில தினங்களுக்கு முன்பு இரவில் திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே இவர் நடந்து வந்து கொண்டிருந்த போது மோட்டார்சைக்கிள்களில் வந்த கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி இவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது.
திருச்சுழி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தின் அருகேயுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் முன் பகுதியில் பொருத்தப் பட்டிருந்த மூன்று கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத நிலையில் இருந்ததால் குற்றவாளிகளை பிடிக்க திணறி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் இதில் தீவிரமாக துப்பு துலக்கி திருச்சுழியை சேர்ந்த அருண்பாண்டி, ஹரிகிருஷ்ணன் மற்றும் 14 வயதுள்ள ஒரு சிறுவனை கைது செய்தனர். அருண்பாண்டியும் ஹரிகிருஷ்ணனும் தனது நண்பர்களுடன் சாமுவேல் மரிய செல்வகுமார் வீட்டின் அருகே அமர்ந்து அடிக்கடி மது மற்றும் கஞ்சா போன்ற போதைபொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை சாமுவேல் மரிய செல்வகுமார் கண்டித்ததால் அவரை தீர்த்துக்கட்டியதாகவும் இதற்கு சிறுவனும் உதவியாக இருந்ததாகவும் இருவரும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நண்பர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி கொலை செய்ததாகவும் அவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து மேலும் 2 பேரை போலீசார்தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள அருண்பாண்டி திருச்சுழியில் ஏற்கனவே நடந்த கொலை வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story