பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
பழனி,
திண்டுக்கல் மாவட்ட மாற்றுதிறனாளிகளின் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி, ஊராட்சி பேரூராட்சி மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் அருண்ராஜ், தனித்துறை சமூகபாதுகாப்புதிட்ட அலுவலர் சிவக்குமார், மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சுவாமிநாதன், தனிதாசில்தார்கள் குளிவேல், லீலாரெஜினா, ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். டாக்டர் சதீஷ்பாபு தலைமையில் மருத்துவ குழுவினர் மாற்றுதிறனாளிகளை தேர்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியல் 140 பேர்களுக்கு உபகரணங்கள் வழங்க அளவீடு செய்யப்பட்டது. மேலும் வங்கி கடன் இலவச வீட்டுமனைப்பட்டா, வீடு, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை கேட்டு 287 மனுக்கள் பெறப்பட்டது.
இன்று (வியாழக்கிழமை) குஜிலியம்பாறை, நாளை செம்பட்டி, ஜூன் 1-ந்தேதி நத்தம், ஜூன் 3-ந்தேதி கொடைக்கானல் ஆகிய இடங்களில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தகுதியுள்ளவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார்கார்டு நகல் போன்ற ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.
Related Tags :
Next Story