ஸ்டெர்லைட் தாமிர வித்யாலயம் திட்டத்தின் கீழ் 1,100 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை


ஸ்டெர்லைட் தாமிர வித்யாலயம் திட்டத்தின் கீழ் 1,100 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
x
தினத்தந்தி 30 May 2019 9:30 PM GMT (Updated: 30 May 2019 7:17 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம், தாமிர வித்யாலயம் திட்டத்தின் கீழ் 1,100 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம், தாமிர வித்யாலயம் திட்டத்தின் கீழ் 1,100 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மாவட்டத்தில் உள்ள நலிவுற்ற குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக, ஸ்டெர்லைட் ஆலையின் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் தாமிரா வித்யாலயா திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் 2 ஆயிரத்து 300 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 80 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி மாணவ-மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் ஏற்கனவே விண்ணப்பித்த 1,200 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு உள்ளன.

கல்வி உதவித்தொகை

இதன் தொடர்ச்சியாக 1,100 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் முருகேசுவரன், அமித் அகர்வால், பொதுமேலாளர்கள் சர்வேசன், குமரவேந்தன் ஆகியோர் 1,100 மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் கல்வி உதவித்தொகையை வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக மணிகண்டன், சுமதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் திரளான மாணவ-மாணவிகள், பொதுமக்கள், நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி கட்டிடம்

இது குறித்து ஸ்டெர்லைட் ஆலை தலைமை செயல் அதிகாரி பங்கஜ்குமார் கூறியதாவது:- எங்களுடைய மாணவர்களின் ஆர்வத்தைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்வி என்பது ஒருவரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஈடுஇணையில்லாத ஒரு மதிப்புடைய அம்சமாகும். எனவே அது ஒவ்வொரு இளைஞனின், குழந்தையின் உரிமையாகும். நம் சமுதாயத்தினருக்கு அதை உறுதி செய்வதற்கு உதவக்கூடிய, முனைப்பு நடவடிக்கைகளை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் எடுப்பதற்கு தயாராக இருக்கிறது.

தற்போது ஆலை தொடர்பாக வழக்கு நடப்பதால் பள்ளிக்கூடம் கட்ட முடியவில்லை. வழக்கு முடிந்த பிறகு தாமிர வித்யாலயம் பள்ளிக்கூடம், தாமிரா -1 வளாகத்தில் அடுத்த ஆண்டுக்குள் கட்டப்படும். இந்த பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை இருக்கும். முதலில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரையும் தொடர்ந்து படிப்படியாக வகுப்புகள் அதிகரிக்கப்படும். தற்போது விண்ணப்பித்து உள்ள 2 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகளுக்கும் அந்த பள்ளிக்கூடத்தில் இடம் உண்டு.

மக்களோடு இணைந்து..

இது தவிர பல்நோக்கு ஆஸ்பத்திரி அமைப்பதற்கான இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் மக்களோடு இணைந்து, இணக்கமாக செயல்பட விரும்புகிறோம். நான் ஏற்கனவே இங்கு பணியாற்றி உள்ளேன். இங்கு உள்ள சூழ்நிலை எனக்கு நன்றாக தெரியும். இதனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு இணக்கமான சூழலை உருவாக்கி ஆலையை தொடங்க விரும்புகிறோம். இதில் மக்களையும் எங்களோடு சேர்த்து அழைத்து செல்ல விரும்புகிறோம். அதனால் இது போன்ற மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் பலனை போன்று மக்களுக்கும் பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story