ஆசிரியர் தகுதித்தேர்வு: மையங்களுக்கு தடையின்றி மின்வினியோகம் செய்திட வேண்டும்


ஆசிரியர் தகுதித்தேர்வு: மையங்களுக்கு தடையின்றி மின்வினியோகம் செய்திட வேண்டும்
x
தினத்தந்தி 31 May 2019 3:30 AM IST (Updated: 31 May 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தகுதித்தேர்வு அன்று அனைத்து தேர்வு மையங்களுக்கும் தடையின்றி மின்வினியோகம் செய்திட வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

ஆசிரியர் தகுதித்தேர்வு முதல்தாள் ஜூன் மாதம் 8-ந் தேதியும், 2-ம் தாள் 9-ந் தேதியும் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் முதல்தாளை 7 மையங்களில் 2,909 தேர்வர்களும், 2-ம் தாளை 31 தேர்வு மையங்களில் 12,348 தேர்வர்களும் எழுத உள்ளனர்.

காவல்துறையினர் வினாத்தாள்களை பாதுகாப்பாக வைக்கப்படும் கட்டுக்காப்பகங்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு எடுத்துச்செல்லும் பணிகளின்போது முழுமையான அளவில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்வு மையங்களில் ஒழுங்கீனங்களை தவிர்க்கும் பொருட்டு உதவி கலெக்டர்கள் மேற்பார்வை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின்வினியோகம் செய்திட வேண்டும். போக்குவரத்து துறையினர் தேர்வு நாட்களில் தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து சீராக அமைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதன்மை கல்வி அலுவலர் தேர்வு மையங்களுக்கு போதுமான பணியாளர்களை நியமனம் செய்து, தேர்வு நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் உ‌ஷா மற்றும் கல்வித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story