பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் வாக்குறுதிப்படி இந்த ஆண்டே 300 பேருக்கு இலவச உயர்கல்வி


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் வாக்குறுதிப்படி இந்த ஆண்டே 300 பேருக்கு இலவச உயர்கல்வி
x
தினத்தந்தி 31 May 2019 4:30 AM IST (Updated: 31 May 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் வாக்குறுதிப்படி 300 பேருக்கு இலவச உயர்கல்வி இந்த ஆண்டே வழங்கப்படும் என்று பாரிவேந்தர் எம்.பி. கூறினார்.

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாரிவேந்தர் எம்.பி. நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் பிரசாரத்தின்போது சட்டமன்ற தொகுதிக்கு தலா 50 பேர் வீதம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 300 மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் கல்வி கட்டணம் எதுவும் இன்றி தனிப்பட்ட முறையில் இலவச உயர்கல்வி, 300 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை கட்டுப்படியாக கூடிய விலையில் வாங்கி கொள்வேன் என வாக்குறுதி அளித்து இருந்தேன்.

இதில் இலவச கல்வி திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து ஏழை- எளிய மாணவர்களை சாதி, மதம், கட்சி இவற்றிற்கு அப்பாற்பட்டு வெளிப்படையாக தேர்ந்தெடுக்க இருக்கிறோம். இந்த திட்டத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் நடப்பு கல்வியாண்டு அமல்படுத்தப்பட இருப்பதால் இதற்கான விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. மேலும் இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவும் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு எனது சொந்த நிதியில் இருந்து குடிநீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் வழங்குவேன். தேவைப்படும் கிராமங்களில் ஆழ் துளை கிணறுகளும் அமைத்து கொடுப்பேன். நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்கப்படும் ரூ.5 கோடியை முழுமையாக வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பயன்படுத்துவேன். பெரம்பலூரில் பாதியில் நிற்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்து வாதாடுவேன்.

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட், முசிறி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைத்து செயல்படுவேன். பிரதமர் எனது பெயரை சொல்லி கூப்பிடும் அளவுக்கு தெரியும். எனவே அதனை பயன்படுத்தி சிறப்பாக மக்கள் பணியாற்றுவேன். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பிற்படுத்தப்பட்ட தொகுதி என்பதால் அதற்கு கூடுதல் வளர்ச்சி நிதி ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைப்பேன். தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திற்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது.

நான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு அந்த சின்னம் ஒரு காரணம். அதோடு எனக்கு ஒன்றுமில்லை என சொல்வதற்கு நான் ஆள் இல்லை. கடந்த முறை மோடி பிடிக்காது என்ற சூழல் இருந்தபோதே நான் 2 லட்சத்து 38 ஆயிரம் வாக்குகள் பெற்றேன். உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதையே இந்திய ஜனநாயக கட்சி விரும்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story