அம்பை யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை


அம்பை யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 31 May 2019 3:15 AM IST (Updated: 31 May 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

சீராக குடிநீர் வழங்ககோரி அம்பை யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

அம்பை, 

சீராக குடிநீர் வழங்ககோரி அம்பை யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

குடிநீர் வினியோகம்

அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கவுதமபுரி. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும், கருணையாறு மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் தெற்கு தெரு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் மூலம் குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீரை ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தூர்ந்து விட்டது. அதன் பின்னர் அதனை அதிகாரிகள் சரிசெய்யவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

யூனியன் அலுவலகம் முற்றுகை

இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று அம்பை யூனியன் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் சென்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது உடனே சீராக குடிநீர் வழங்கவும், புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story