உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பது குறித்த பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பது குறித்த பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 May 2019 11:00 PM GMT (Updated: 30 May 2019 8:14 PM GMT)

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பது குறித்த பயிற்சியை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

கரூர்,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் அவர்களின் அறிவுரையின்படி, நடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரகம், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் முதன்மை பயிற்றுனர்களுக்கான பயிற்சி வகுப்பு கடந்த 28, 29-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சென்னையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில் கரூர் மாவட்டத்தின் சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ்(க.பரமத்தி), கிருஷ்ணமூர்த்தி(கரூர்), காகித ஆலை பேரூராட்சி செயல் அலுவலர்வெங்கடேசன், நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் முதன்மை பயிற்றுனர்களாவர்.

இந்தநிலையில் நேற்று கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊராட்சிகளுக்குட்பட்ட அலுவலர்களுக்கான பயிற்சி நிர்வாகம் மற்றும் திட்டப்பணிகளுக்கான அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தேர்தல் உதவியாளர்கள் மற்றும் கணினி இயக்குனர்கள் ஆகியோருக்கு காலையிலும், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் கணினி உதவியாளர்களுக்கான பயிற்சி மதியமும் முதன்மை பயிற்றுனர்களால் வகுப்பு நடத்தப்பட்டது.

அர்பணிப்புடன் செயல்பட வேண்டும்

பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் அன்பழன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அனைவரும் பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்படும் தகவல்களை கவனமாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை வெளிப்படையாக கேளுங்கள், அதற்காக அளிக்கப்படும் விளக்கங்கள் உங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இந்தியத்திருநாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத்திருவிழாவாக கருதப்படும் மக்களைவைப் பொதுத்தேர்தலையும், சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலையும் நல்லமுறையில் அனைத்துதுறை அலுலவர்களின் ஒத்துழைப்போடும் நடத்தி முடித்துள்ளோம். அதேபோல உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளிலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேர்மையோடும், அர்பணிப்பு உணர்வோடும் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

அதிகாரிகள்

இதில் உள்ளாட்சி தேர்தலுக்கான மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்(உள்ளாட்சி தேர்தல்) ஜெயந்திராணி, அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story