சமயபுரம் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


சமயபுரம் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2019 11:00 PM GMT (Updated: 30 May 2019 8:26 PM GMT)

சமயபுரம் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமயபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது மேட்டு இருங்களூர். இவ்வூரில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அதிகாரிகளிடம் முறையாக அனுமதி கோரி விழா கமிட்டியினர் பல நாட்களாக முயற்சி செய்து வந்தனர். அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக வாடிவாசல் அமைப்பது, சவுக்குக்கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், உயர் அதிகாரிகள் அன்று மாலை தான் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. அதில் 29, 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பெயரளவிற்கு சில மாடுகளை வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடுங்கள் என்று மாவட்ட அளவிலான அதிகாரிகள் விழா கமிட்டியினரை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை.

இதையடுத்து முறையாக ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் கடும் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் கூறினர். பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

Next Story