இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் சி.கதிரவன் தகவல்


இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் சி.கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 31 May 2019 4:15 AM IST (Updated: 31 May 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் ஈரோடு மாவட்டத்தில் 108 இடங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு, 

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி ஈரோடு கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வருகிற 4-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனை கள், பன்முக மருத்துவ மனைகள் என மொத்தம் 108 இடங்களில் நடைபெற உள்ளது.

ஈரோடு கால்நடை பன்முக மருத்துவமனையில் நடைபெற உள்ள இந்த முகாமினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைக்கிறார். எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாமல் இந்த இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, தங்கள் நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முகாமிற்கு தேவையான தடுப்பு மருந்துகளை இந்தியன் இம்முனாலாஜிகல்ஸ் நிறுவனம் 2 ஆயிரத்து 500 டோஸ்களும், ரோட்டரி ஈரோடு வடக்கு 1,500 டோஸ்களும் இலவசமாக வழங்கி உள்ளன. வெறி நாய்க்கடி நோய் அல்லது ரேபிஸ் என்பது பாதிக்கப்பட்ட நாய் மற்றும் விலங்குகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளை கடிப்பதன் மூலம் பரவும் ஒரு கொடிய தொற்று நோய் ஆகும்.

நாய் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசியை அதன் 3 மாத வயதிலும் பிறகு வருடத்திற்கு ஒரு முறை ஊக்க தடுப்பூசியாகவும் போட வேண்டும். மேலும் வெறிநோய் பரவுவதைத்தடுக்கும் வகையில், நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இலவச கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story