கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைக்க மூத்த மந்திரிகள் ராஜினாமா? காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை


கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைக்க மூத்த மந்திரிகள் ராஜினாமா? காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை
x
தினத்தந்தி 31 May 2019 4:00 AM IST (Updated: 31 May 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைக்க மூத்த மந்திரிகளை ராஜினாமா செய்ய வைப்பது பற்றி காங்கிரஸ் தலைவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைக்க மூத்த மந்திரிகளை ராஜினாமா செய்ய வைப்பது பற்றி காங்கிரஸ் தலைவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பிறகு சித்தராமையா, தற்போதைக்கு மந்திரி சபை மாற்றம் இல்லை என்று அறிவித்தார்.

கூட்டணி ஆட்சி கவிழும்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக பணியாற்றி வருகிறார். மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுமார் 10 ேபர் பா.ஜனதாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதனால் கூட்டணி ஆட்சி கவிழும் நிலைக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

மந்திரிகள் 8 பேர் ராஜினாமா

போர்க்கொடி தூக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் மந்திரி பதவி வழங்க கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த மந்திரிகள் 8 பேர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆலோசிக்க கர்நாடக காங்கிரஸ் சார்பில் மந்திரிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மேலிட ெபாறுப்பாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் மந்திரிகள் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

தற்போதைக்கு வேண்டாம்

இதில் பேசிய தலைவர்கள், ஆட்சியை தக்கவைக்க மந்திரிகள் சிலர் மந்திரி பதவியை தியாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தாங்களாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். அதற்கு மந்திரிகள், மந்திரி பதவியை ராஜினாமா செய்வது தற்போதைக்கு வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

மேலும் அவர்கள், சித்தராமையா ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்தவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சி பணியாற்றட்டும். புதிதாக மந்திரி பதவியில் இருப்பவர்களை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசை கவிழ்க்க முயற்சி

இந்த கூட்டத்திற்கு பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதவாத கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த அரசை கவிழ்க்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

மக்களின் ஆதரவு மோடிக்கு...

பா.ஜனதாவின் இந்த முயற்சிக்கு சில ஊடகங்கள் உதவி செய்கிறது. மோடி ஆட்சியில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. அப்போது அதற்கு தார்மீக பொறுப்பேற்று மோடி ராஜினாமா ெசய்தாரா?.

இப்போது மக்களின் ஆதரவு மோடிக்கு கிடைத்துள்ளது. மக்களின் தீர்ப்ைப நாங்கள் ஏற்கிறோம். சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடியூரப்பா சொல்கிறார். எடியூரப்பா சொல்வதை நாங்கள் கேட்க முடியாது.

மந்திரிசபை மாற்றம் இல்லை

மக்களின் முடிவுக்கு மட்டுமே நாங்கள் மரியாதை கொடுக்கிறோம். எங்களுக்கு பா.ஜனதா மற்றும் ஆபரேஷன் தாமரை பற்றி எந்த பயமும் இல்லை. தற்போதைக்கு மந்திரிசபை மாற்றமோ அல்லது மந்திரிசபை விரிவாக்கமோ நடைபெறாது.

அடுத்து வரும் நாட்களில் மந்திரிசபை மாற்றம் நடைபெறும். ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. காங்கிரசை விட்டு விலக மாட்டார். ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அவர் என்ன விளக்கம் அளிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story