மானியத்துடன் கடன் வாங்கி தருவதாக லட்சக்கணக்கான ரூபாய் மோசடி தனியார் நிறுவனம் மீது புகார்
மானியத்துடன் கூடிய கடன் வாங்கி தருவதாக லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிலர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுப்பதற்காக வந்தனர். மானியத்துடன் கடன் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, ஒரு தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் தனித்தனியாக புகார் மனுக்களை கொடுத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:-
சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் கிளை ஈரோடு பெருந்துறை ரோட்டில் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் ஒரு வங்கியை போல செயல்படுகிறது. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும், அந்த நிறுவனத்தில் வங்கி கணக்கை தொடங்கினால் மானியத்துடன் கடன் வழங்குவதாகவும் கூறினார்கள். மேலும், இதனால் நாங்கள் ரூ.500 முதல் ரூ.700 வரை செலுத்தி சேமிப்பு கணக்கை தொடங்கினோம்.
அந்த நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும் கூறினார்கள். இதனால் பலரும் வேலைக்கு சேர்ந்தோம். அதற்கு குறிப்பிட்ட பணத்தை வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் என்று கூறினர். இதனால் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை செலுத்தி வேலையில் சேர்ந்தோம். அலுவலகத்திற்கு உள்ளே வேலை இருப்பதாக தொடக்கத்தில் கூறினார்கள். ஆனால் பொதுமக்களிடம் சென்று சேமிப்பு கணக்கை தொடங்க வைக்க செய்யும் பணியில் எங்களை ஈடுபடுத்தினர். பொதுமக்கள் சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கு ஏற்ப பணம் கொடுப்பதாகவும் கூறினார்கள். ஆனால் எங்களுக்கான சம்பளமும் கொடுக்கவில்லை, வைப்புத்தொகையை கேட்டாலும் திரும்ப கொடுக்கவில்லை. மேலும், சேமிப்பு கணக்கு தொடங்கியதுடன் இருக்கிறது. யாருக்கும் இதுவரை மானியத்துடன் கடனும் கொடுக்கவில்லை. அப்போதுதான் நிறுவனம் சார்பில் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து பலர் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த நிறுவனத்தின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story