கர்நாடக கவர்னர் வஜூபாய்வாலாவை மாற்ற மத்திய அரசு முடிவு புதிய கவர்னராக உமாபாரதியை நியமிக்க வாய்ப்பு
கர்நாடக கவர்னர் வஜூபாய்வாலாவை மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், புதிய கவர்னராக உமாபாரதியை நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக கவர்னர் வஜூபாய்வாலாவை மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், புதிய கவர்னராக உமாபாரதியை நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம்
கர்நாடக கவர்னராக வஜூபாய்வாலா பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி கவர்னராக பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் வருகிற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் கவர்னர் வஜூபாய்வாலாவை மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவர்னர் வஜூபாய்வாலாவின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் தான் முடிகிறது. இருப்பினும் அவர் ஜூன் 3-வது வாரத்திற்குள் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் எழுந்துள்ள நெருக்கடியை பயன்படுத்தி பா.ஜனதா ஆட்சி அமைக்க கர்நாடக தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு பா.ஜனதா மேலிடமும் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதனால் விரைவில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
உமாபாரதியை நியமிக்க வாய்ப்பு
இந்த நிலையில் தங்களுக்கு சாதகமான ஒருவர், கவர்னராக இருந்தால் ஆட்சி கவிழ்ப்பின் போது பிரச்சினை எழாது எனவும், எனவே கர்நாடக கவர்னரை மாற்ற மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அதே வேளையில், கர்நாடகத்திற்கு புதிய கவர்னராக பா.ஜனதாவை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய மந்திரி யுமான உமாபாரதியை நியமிக்க மத்திய அரசு பரிசீலனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. அநேகமாக ஜூன் 3-வது வாரத்திற்குள் கர்நாடக கவர்னர் மாற்றம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story