நாடாளுமன்ற தேர்தலில் எதிரெதிராக போட்டியிட்டனர் நடிகை சுமலதா எம்.பி.க்கு நிகில் குமாரசாமி வாழ்த்து


நாடாளுமன்ற தேர்தலில் எதிரெதிராக போட்டியிட்டனர் நடிகை சுமலதா எம்.பி.க்கு நிகில் குமாரசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 31 May 2019 4:30 AM IST (Updated: 31 May 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் எதிரெதிராக போட்டியிட்ட நிலையில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி ‘இன்ஸ்டாகிராம்’ பதிவு மூலம் நடிகையும், எம்.பி.யுமான சுமலதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் எதிரெதிராக போட்டியிட்ட நிலையில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி ‘இன்ஸ்டாகிராம்’ பதிவு மூலம் நடிகையும், எம்.பி.யுமான சுமலதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மண்டியா எம்.பி. சுமலதா

மறைந்த கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இதில் சுமார் 1 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அவர் வெற்றி ெபற்று எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். இவரை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் களம் இறங்கிய முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், அம்பரீஷ்-சுமலதாவின் மகன் அபிஷேக் நடித்துள்ள படம் ‘அமர்’ இன்று (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது. இதையொட்டி நடிகர் அபிஷேக் மற்றும் புதிய எம்.பி. சுமலதா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து நிகில் குமாரசாமி தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

அபிஷேக்கிற்கு வாழ்த்து

என் சகோதரர் அபி (அபிஷேக்) நடித்து வெளியாகும் முதல் படம் ‘அமர்’ நாளை(அதாவது இன்று) வெளியாகிறது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். அபி நன்றாக நடித்து இருப்பார் என்று நம்புகிறேன்.

இதனால், அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பாருங்கள். சமூக மதிப்புக்காக இந்த பதிவை செய்ததாக நினைக்கும் பொதுமக்களிடம் ஒன்று கூறுகிறேன். நான் உறவுகளுக்கு மதிப்பளிப்பவன். அதை விட பெரிதாய் ஒன்றும் இல்லை என்று நினைப்பவன். இதை தேர்தல் பிரசாரத்திலும் கூறி இருக்கிறேன்.

சுமலதாவுக்கு வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சுமாக்காவுக்கு (சுமலதா) வாழ்த்துக்கள் தெரிவிக்க விரும்புகிறேன். மண்டியா வளர்ச்சிக்காக யாருடன் வேண்டுமானாலும் கைக்கோர்க்க தயாராக இருக்கிறேன். மண்டியா தேர்தல் தோல்விக்கான முழுபொறுப்பும் என்னையே சேரும். இதற்காக எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களையும், எம்.எல்.சி.க்களையும், கட்சி தொண்டர்களையும், முதல்-மந்திரியையும், ஜனதாதளம்(எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடாவையும் யாரும் குற்றம் சொல்ல வேண்டாம்.

ஜனதாதளம்(எஸ்)-காங்கிரஸ் கூட்டணி அரசு மண்டியா வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் ரூ.8,671 கோடி ஒதுக்கியது. இருப்பினும் மக்கள் என்னை எளிதாக புறக்கணித்து விட்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்த தொண்டர் களிடம் உண்மையில் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

மனதை வெல்ல முயற்சிப்பேன்

நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு வாக்களித்த 5 லட்சத்து 76 ஆயிரத்து 400 வாக்காளர்களுக்கு நன்றி. மீதமுள்ள வாக்காளர்களின் மனதை வெல்ல வருங்காலத்தில் முயற்சிப்பேன். இந்த தேர்தலில் நான் தோற்றாலும் கூட தனிப்பட்ட முறையில் ஏராளமான அனுபவங்களை பெற்றுள்ளேன். தேர்தல் முதல் நாளில் இருந்தே நான் நேர்மறை எண்ணம் கொண்ட நபராக இருந்தேன்.

இருப்பினும் உங்களுக்கு நிகில் குமாரசாமி தீவிரமான அரசியல்வாதியா?, இல்லையா? என்ற கேள்வி எழுந்தால் அதற்கு நான் பதில் அளிப்பேன். விரைவில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்பதோடு, கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவேன். அதேநேரத்தில் ஒன்று அல்லது 2 நாட்களில் பத்திரிகையாளர்களை சந்திப்பேன். தேர்தலில் எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. அனைவருக்கும் கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

நிகில் குமாரசாமியின் இந்த பதிவுக்கு நடிகர் அபிஷேக் நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story