கோபி பகுதியில் 5 மோட்டார்சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
கோபி பகுதியில் 5 மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தார்கள்.
கடத்தூர்,
கோபி சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் அபுதாகிர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி மொடச்சூரில் உள்ள ஒரு டீக்கடைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது வண்டியை கடையின் வாசலில் நிறுத்தியிருந்தார்.
டீக்குடித்த பின்னர் அவர் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது. தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோபி போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல் கோபியை சேர்ந்த அரவிந்த், பிரபு ஆகியோர் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்றார்கள். அப்போது கடை வாசல்களில் தங்களுடைய மோட்டார்சைக்கிள்களை நிறுத்திவிட்டு சென்றார்கள்.
அந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் யாரோ கொள்ளையர்கள் திருடிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அவர்களும் தனித்தனியாக கோபி போலிசில் புகார் அளித்தார்கள்.
இந்த 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கோபி மொடச்சூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தார்கள்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தி, 2 வாலிபர்களிடம் விசாரித்தார்கள்.
விசாரணையில் அவர்கள் கோபி மொடச்சூர் தண்டுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கார்த்தி என்கிற கண்ணன் (வயது 22), சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த காஜாமொகைதீன் (25) ஆகியோர் என்பதும், இவர்கள்தான் அபுதாகீர், அரவிந்த், பிரபு ஆகியோரின் மோட்டார் சைக்கிளை திருடியது என்றும் தெரியவந்தது.
இது தவிர கோபி பகுதியில் வேறு 2 பேரின் மோட்டார்சைக்கிளையும் கார்த்தியும், காஜா மொகைதீனும் திருடியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், இருவரிடம் இருந்தும் 5 மோட்டார்சைக்கிள்களை மீட்டனர்.
Related Tags :
Next Story