பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு சென்று பாதியிலேயே திரும்பிய ரங்கசாமி


பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு சென்று பாதியிலேயே திரும்பிய ரங்கசாமி
x
தினத்தந்தி 30 May 2019 11:30 PM GMT (Updated: 30 May 2019 9:34 PM GMT)

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு சென்ற என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பாதியிலேயே புதுச்சேரி திரும்பினார்.

புதுச்சேரி, 

இந்தியாவின் பிரதமராக மோடி நேற்று 2-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதேபோல் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கும் அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள நேற்று மதியம் புதுவையில் இருந்து கார் மூலம் சென்னை சென்றார்.

அங்கிருந்து மதியம் 1.20 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் அவர் புதுவையில் இருந்து தாமதமாக புறப்பட்டதால் டெல்லி செல்லும் விமானத்தில் செல்ல முடியவில்லை. இதனை தொடர்ந்து ரங்கசாமி டெல்லி செல்லும் தனது பயணத்தை கைவிட்டு பாதியிலேயே புதுச்சேரி திரும்பினார்.

இதேபோல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக டெல்லியில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளித்தார். அந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது டெல்லியில் நடைபெறும் பல்வேறு முக்கியமான கூட்டங்களில் கலந்து கொள்ள டெல்லி செல்லும்போது இதேபோல் தாமதமாக சென்று விமானத்தை விட்டு விட்டு புதுச்சேரி திரும்பி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story