கொடைக்கானலில், கோடை விழா மலர் கண்காட்சியுடன் தொடங்கியது
கொடைக்கானலில் கோடை விழா மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. இதில் வனத்துறை, வேளாண்மை, சுற்றுலாத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 58-வது கோடை விழா மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. விழாவில் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பேசினார். சுற்றுலா அலுவலர் உமாதேவி வரவேற்றார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோடை விழாவை தொடங்கி வைத்தார். கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாராயணசாமி திட்ட விளக்கவுரையாற்றினார். வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இந்த மலர் கண்காட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் மலர்கள், அரிய வகை பழங்கள், காய்கறிகள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் அனந்த சயனத்தில் ரெங்கநாதர் இருப்பது போன்று காய்கறிகளால் செய்யப்பட்ட உருவம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அதே போல் தாஜ்மகால், கொக்கு, முதலை, ஒட்டகசிவிங்கி, கிளி, நார்னியா போன்ற உருவங்களும் காய்கறிகளால் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். அவர்களை தொடர்ந்து பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் மலர்களால் உருவாக்கப்பட்ட கிளி, நார்னியா, ரெங்கநாதர் ஆகியவற்றின் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். மேலும் அனைத்து துறைகள் சார்பில் கண்காட்சி விளக்க அரங்கு ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிற ரோஜாப்பூக்களால் செய்யப்பட்ட நந்தி, தோகை விரித்தாடும் மயில், நடனமாடும் மங்கைகள், வாத்திய கருவிகள் இசைக்கும் பெண்கள் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக பார்த்து ரசித்தனர். மேலும் பிரையண்ட் பூங்காவில் பலவித வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய பூக்களை கண்டு ரசிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள், பூக்களுக்கு அருகில் சென்று ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மலர் கண்காட்சியையொட்டி நாட்டுப்புற கலைஞர்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று தொடங்கிய கோடை விழா வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது.
Related Tags :
Next Story