மராட்டியத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மராட்டியத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 2019-20-ம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மும்பை,
மராட்டியத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 2019-20-ம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இடஒதுக்கீடு மசோதா
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு நிறைவேற்றியது. இதனை தொடர்ந்து மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதம் இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் மராட்டியத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதமே மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர்கள் தேர்வு தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இடையில் வந்த 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை மராட்டிய அரசு மருத்துவ மேற்படிப்பிலும் புகுத்தியது.
வழக்கு
இதை எதிர்த்து பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவ மேற்படிப்பில் கூடுதல் இடங்களை உருவாக்காமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதால், தன்னை போன்ற பொதுப்பிரிவினருக்கான இடம் மேலும் குறைந்துவிடுவதாக மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அனிருத்தா போசே அடங்கிய விடுமுறை கால அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆட்டம் தொடங்கிய பிறகு நீங்கள் விதிமுறைகளை மாற்றக்கூடாது. எனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் மருத்துவ மேற்படிப்பில் நடப்பு 2019-20-ம் ஆண்டில் பொருந்தாது என்றும், அதற்கு தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story