ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான, மாநகராட்சி உதவி நகரமைப்பு அதிகாரி உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு
கோவையில் ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான மாநகராட்சி உதவி நகரமைப்பு அதிகாரி உள்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை,
கோவை டாடாபாத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 53), ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கோவை தெலுங்குபாளையத்தில் 4.70 ஏக்கர் நிலம் உள்ளது. அதற்கு வீட்டுமனை அங்கீகாரம் கேட்டு கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தெற்கு உதவி நகரமைப்பு அலுவலகத்தில் சோமசுந்தரம் விண்ணப்பித்தார்.
இதையடுத்து அவர், பலமுறை அங்கு சென்று கேட்டபோதும் அந்த நிலத்துக்கு வீட்டுமனை அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இது பற்றி அவர், உதவி நகரமைப்பு அதிகாரி சரவணனிடம் கேட்டார். அதற்கு அவர் ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக உங்கள் நிலத்துக்கு வீட்டுமனை அங்கீகாரம் கொடுப்பதாக கூறினார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சோமசுந்தரம், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி னார். ஆனாலும் ரூ.5 லட்சம் கொடுத்தால் தான் வீட்டுமனைக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்று சரவணன் உறுதியாக கூறியுள்ளார். இதையடுத்து அவர், ரூ.5 லட்சத்தை லஞ்சமாக கொடுக்க ஒப்பு கொண்டார். முதலில் ரூ.2½ லட்சத்தை கொடுப்பதாகவும், அங்கீகாரம் வழங்கிய பிறகு ரூ.2½ லட்சம் கொடுப்பதாகவும் சோமசுந்தரம் கூறினார். அதை சரவணனும் ஏற்றுக்கொண்டார்.
ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத சோமசுந்தரம், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சோமசுந்தரத்திடம் கொடுத்து, சரவணனிடம் கொடுக்குமாறு அறிவுரை கூறினார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு கோவையில் உள்ள தெற்கு உதவி நகரமைப்பு அலுவலகத்துக்கு சென்ற சோமசுந்தரம், அங்கிருந்த சரவணனை சந்தித்து ரசாயனம் தடவிய ரூ.2½ லட்சத்தை கொடுத்தார். அதை அவர் வாங்காமல் தனது உதவியாளரான ஆனந்தகுமாரிடம் (42) கொடுக்குமாறு கூறினார். உடனே அவர் ஆனந்தகுமாரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆனந்தகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், உதவி நகரமைப்பு அதிகாரி சரவணன் லஞ்சம் வாங்க சொன்னதன் பேரில் தான் பணத்தை வாங்கியதாக கூறினார். இதையடுத்து போலீசார் சரவணனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் சோமசுந்தரத்திடம் லஞ்சம் கேட்டதையும், அந்த பணத்தை தனது உதவியாளரிடம் கொடுக்க சொன்னதையும் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் சரவணனையும் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அந்த அலுவலகம் மற்றும் சரவணன் வீட்டில் அதிரடி சோதனை செய்தனர்.
இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பிறகு போலீசார் உதவி நகரமைப்பு அதிகாரி சரவணன் மற்றும் அவருடைய உதவியாளர் ஆனந்தகுமார் ஆகியோரை கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.
அவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த 27-ந் தேதி லஞ்சம் வாங்கிய வழக்கில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையாளர் ரவிக்குமார், இடைத்தரகர் பாலகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்து 2 நாட்களுக்குள் மாநகராட்சி உதவி நகரமைப்பு அதிகாரி மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது, மாநகராட்சி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story