நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்றது - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு


நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்றது - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 May 2019 11:15 PM GMT (Updated: 31 May 2019 12:14 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வெற்றி பெற்றுள்ளது என்று கொடைக்கானல் கோடை விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

கொடைக்கானல்,

கொடைக்கானலில் கோடைவிழா மலர் கண்காட்சியுடன் நேற்று தொடங்கியது. கோடை விழாவை தொடங்கி வைத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இடத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் சுற்றுலா பயணிகள் அந்த இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு பேட்டரி கார்கள் மூலம் சுற்றுலா இடங்களை சுற்றிபார்க்கலாம்.

வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து பொதுமக்களை அச்சப்படுத்துவதுடன், பயிர்களையும் நாசப்படுத்துகின்றன. இதனை தடுப்பதற்காக வன விலங்குகளுக்கு தேவையான இயற்கை உணவுகளை வனப்பகுதியிலேயே நடவு செய்தல், தண்ணீர் தொட்டிகள் அமைத்து ஆண்டு முழுவதும் அந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்புதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் கொடைக்கானல் பகுதியில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 29.34 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.13½ கோடி செலவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அத்துடன் நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டத்திற்காக ரூ.50 கோடியில் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவுப்படி சில தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த பிரச்சினையில் அரசு எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. விடுமுறை முடிந்து நீதிமன்றங்கள் திறக்கப்பட்டதும் தங்கும் விடுதிகள் பிரச்சினையை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

அதையடுத்து தமிழகத்தில் நடந்து வந்த அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அதுபோலவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சியை தொடர மக்கள் உத்தரவிட்டுள்ளனர். அடுத்து நடக்கும் அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்று ஆட்சியை தொடரும். மத்தியில் பிரதமர் மோடி 2-வது முறையாக இன்று (அதாவது நேற்று) பதவி ஏற்றுள்ளார். மத்திய அரசின் நிதி உதவி மூலம் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறுஅவர் பேசினார்.

அதையடுத்து மலர் கண்காட்சியை திறந்து வைத்து வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

விவசாயத்தை மேம்படுத்த அரசு எடுத்த முயற்சியின் காரணமாக விவசாயிகளின் வருவாய் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. கொடைக் கானல் பகுதியில் உள்ள பூங்காக்களில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக தற்போது அந்த பூங்காக்கள் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேல்மலை கிராமமான கவுஞ்சியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் மற்றும் கேரட் கழுவும் மையம் ஆகியவை ரூ.9 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. நுண்ணுயிர் பாசன திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், தமிழகம் சுற்றுலாத்துறையில் 7 ஆண்டுகளில் பல ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலா துறை சார்பாக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் பழனியில் ரூ.1 கோடியில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்றார். 

Next Story