கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவி கண்டித்ததால், நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி தற்கொலை


கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவி கண்டித்ததால், நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 30 May 2019 10:45 PM GMT (Updated: 31 May 2019 12:15 AM GMT)

கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி மனைவி கண்டித்ததால் தொழிலாளி நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாருக்கு தெரியாமல் அவரது உடலை உறவினர்கள் எரித்து விட்டனர். கல்வராயன்மலையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கச்சிராயப்பாளையம்,

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலையில் உள்ள கொடமாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் ரவி (வயது 30), தொழிலாளி. இவருக்கும் கல்வராயன்மலையில் உள்ள மேல்பாச்சேரி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மகள் பிரியா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மேல்பாச்சேரியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று, அங்கேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில் ரவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த பிரியா, கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி ரவியை கண்டித்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவும் பிரியா, கள்ளக்காதலை கைவிடுமாறு ரவியிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் பிரியாவுக்கும், ரவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரவி, தனது குழந்தைகளுடன் தூங்க சென்றார்.

இந்த நிலையில் நள்ளிரவில் எழுந்த ரவி, வீட்டில் ஆனந்தன் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து, தனது கழுத்தில் வைத்து சுட்டுக்கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த பிரியா மற்றும் உறவினர்கள் ரவி பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.

பின்னர் உறவினர்கள் ரவி தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரிக்க முடிவு செய்தனர். அதன்படி நள்ளிரவிலேயே, அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரித்து விட்டனர்.

இதுபற்றி அறிந்த மேல்பாச்சேரி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்நாதன், நேற்று காலை கரியாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆனந்தன் உரிமம் பெறாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும், அதனை பயன்படுத்தி ரவி தற்கொலை செய்து கொண்டதும், போலீசாருக்கு தெரிவிக்காமல் உறவினர்களே இரவோடு இரவாக ரவியின் உடலை எரித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், உடலை எரித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story