கடற்கரை-செங்கல்பட்டு-திருமால்பூர் இடையே அதிவிரைவு மின்சார ரெயில் சேவை இன்று முதல் இயக்கம்


கடற்கரை-செங்கல்பட்டு-திருமால்பூர் இடையே அதிவிரைவு மின்சார ரெயில் சேவை இன்று முதல் இயக்கம்
x
தினத்தந்தி 31 May 2019 10:30 PM GMT (Updated: 31 May 2019 4:33 PM GMT)

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு-திருமால்பூர் இடையே அதிவிரைவு மின்சார ரெயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது.

சென்னை,

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்கப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என்பதால் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-திருமால்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த அதிவிரைவு மின்சார ரெயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து பயணிகள் தரப்பில் அதிவிரைவு மின்சார ரெயிலை இயக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு ஆய்வுக்கு பின்னர் ரெயில்வே வாரிய பாதுகாப்பு கமிஷனர் கடற்கரை-செங்கல்பட்டு-திருமால்பூர் இடையே அதிவிரைவு மின்சார ரெயில் சேவையை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கினார்.

ஆனாலும் கடந்த 11 மாதங்களாக அதிவிரைவு மின்சார ரெயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) முதல் அதிவிரைவு மின்சார ரெயில் சேவை மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் பி.மகேஷ் கூறியதாவது:-

கடற்கரை-செங்கல்பட்டு-திருமால்பூர் இடையே 7 அதிவிரைவு மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 11 அதிவிரைவு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது.

தற்போது தேஜஸ் மற்றும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புதிதாக இயக்கப்படுவதால் இந்த சேவை 7 அதிவிரைவு மின்சார ரெயில்களாக குறைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் புறநகர் ரெயில்களை பயன்படுத்துவோரில் 40 சதவீதம் பேர் ‘யூ.டி.எஸ்.’ செயலி மூலம் டிக்கெட் பெறுகின்றனர். இதைப்போல் தமிழகத்திலும் ‘யூ.டி.எஸ்.’ செயலி பயன்பாட்டை பொதுமக்கள் அதிகரித்தால் டிக்கெட் கவுண்ட்டர்களில் கூட்டத்தை தவிர்க்கலாம்.

புறநகர் ரெயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி 6 மாதங்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மின்சார ரெயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்களை பிடிக்கும் விதமாக, ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் அடங்கிய சிறப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார ரெயில்களில், ரெயில்வே ஊழியர்கள் உரிய வேலை அனுமதி இல்லாமல் பயணித்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story