ஓசூர், போச்சம்பள்ளியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
ஓசூர், போச்சம்பள்ளி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. பின்னர் சூறைக்காற்றுடனும், இடி, மின்னலுடனும் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கனமழையின் காரணமாக ஓசூர் நகரில் எம்.ஜி.ரோடு, பாகலூர் ரோடு சர்க்கிள், பஸ் நிலையம், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் முழங்கால் அளவு தேங்கி நின்றது.
வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். பலத்த மழையின் காரணமாக ஓசூர் அருகே பூனப்பள்ளியில் மரம் ஒன்று நடுரோட்டில் சாய்ந்து விழுந்தது. இதனால் ஓசூர்-தளி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நள்ளிரவில் மரம் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. ஓசூர் அருகே ஈச்சங்கூர் ஊராட்சிக்குட்பட்ட சொக்கநாதபுரம் கிராமத்தில் பிரபாகர்ரெட்டி, கிருஷ்ணப்பா, வெங்கடசாமி, பிரகாஷ் ஆகிய விவசாயிகள் பசுமைக்குடில்கள் சூறைக்காற்றுக்கு சேதமடைந்தன. ஓசூரில், மின்னல் தாக்கியதில் சில மின் கம்பங்களில் வயர்கள் எரிந்து விழுந்தன.
இதே போல போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. சூறைக்காற்றுக்கு மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
ஜம்புகூடப்பட்டி, அனுபகவுண்டர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்கள் சூறைக்காற்றுக்கு சேதமடைந்தன. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story