விருத்தாசலம் அருகே, அம்மன் கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விருத்தாசலம் அருகே, அம்மன் கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 31 May 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே அம்மன் கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த ஊ.கொளப்பாக்கம் கிராமத்தில் திரவுபதியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. ஒரே வளாகத்தில் உள்ள இந்த கோவில்களில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜை முடிந்ததும், கோவில்களை பூட்டிவிட்டு பூசாரிகள் வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் மாரியம்மன் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து திரவுபதியம்மன் கோவிலில் இருந்த உண்டியலை தூக்கி கொண்டு அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மர்மநபர்கள் விவசாய நிலத்தில் வீசிவிட்டு சென்ற உண்டியலை கைப்பற்றி கோவிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு ஊ.கொளப்பாக்கம் கிராமத்தில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மர்மநபர்கள் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கோவிலில் கடந்த மாதம்தான் தீ மிதி திருவிழா நடைபெற்றது.

இதனால் உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்து இருக்கும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story