விமான கண்காட்சி நிறுவனத்தில் பங்கு தருவதாக கூறி, பள்ளி நிர்வாகியிடம் ரூ.70 லட்சம் மோசடி - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு வலைவீச்சு


விமான கண்காட்சி நிறுவனத்தில் பங்கு தருவதாக கூறி, பள்ளி நிர்வாகியிடம் ரூ.70 லட்சம் மோசடி - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

விமான கண்காட்சி நிறுவனத்தில் பங்கு தருவதாக கூறி போடியை சேர்ந்த பள்ளி நிர்வாகியிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

தேனி சுப்பன்தெருவை சேர்ந்த முத்திருளப்பன் செட்டியார் மகன் தண்டபாணி. இவர், போடியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியின் நிர்வாகியாக உள்ளார். இவரிடம் தேனி கம்பம் சாலையை சேர்ந்த ஷாஜகான், அவருடைய மனைவி ஜெய்புநிஷா, மகன் ஹரிஸ் அப்துல்காதர், மகள் ஜஹானா ஆகியோர் அறிமுகம் ஆகினர். தண்டபாணியின் குடும்பத்துடன் அவர்கள் நட்பாக பழகினர்.

2016-ம் ஆண்டு, தண்ட பாணியின் வீட்டுக்கு ஷாஜகான் தனது குடும்பத்துடன் சென்று தனது மகன் ஹரிஸ் அப்துல்காதர் விமானத்துறையில் விமானியாக பணியாற்றுவதாக கூறி அறிமுகம் செய்துள்ளார். மேலும், தனது மகனுக்கு தமிழக அரசின் கல்வித்துறையிடம் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விமான கண்காட்சியை நடத்துவதற்கும், இதற்காக ஒரு விமானத்தை 5 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்வதற்கும் அரசு உத்தரவு வழங்கியுள்ளதாக கூறினார். இதற்கான அரசாணை ஒன்றையும் அவர் காண்பித்துள்ளார். மேலும் இதற்காக தமிழ்நாடு சுற்றுலா துறையின் அனுமதி பெற்றுள்ளதாகவும் ஒரு உத்தரவு நகலை காட்டியுள்ளார்.

அத்துடன், ஹரிஸ் அப்துல்காதர் ஒரு விமான கண்காட்சி நிறுவனத்தை தொடங்கி உள்ளதாகவும், அதில் பங்குதாரராக சேர்ந்தால் லாபத்தில் 35 சதவீதம் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். இதை நம்பிய தண்டபாணி தன்னையும் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதற்காக பல தவணைகளில் நேரிலும், வங்கி மூலமாகவும் மொத்தம் ரூ.70 லட்சம் வரை ஷாஜகான் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்றுக் கொண்டு 2 ஆண்டுகள் ஆகியும் லாபத் தொகை எதுவும் கொடுக்கவில்லை. அவர் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. விசாரணையில் அவர் காண்பித்த அரசு உத்தரவுகள் எல்லாம் போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும், போலியான நிறுவனம் பெயரில் மோசடி செய்துள்ளதாகவும் தெரியவந்தது.

தன்னிடம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் தண்டபாணி புகார் செய்தார். அந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்பேரில் இந்த சம்பவம் குறித்து ஷாஜகான், ஜெய்புநிஷா, ஹரிஸ்அப்துல்காதர், ஜஹானா ஆகிய 4 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிராஜ் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். அவர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து, அவர்களை பிடிக்க தனிப்படையினர் சென்னைக்கு விரைந்து உள்ளனர். மோசடி செய்ததாக கூறப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டால் தான் மேலும் இதுபோன்று யாரும் ஏமாற்றப்பட்டுள்ளார்களா? என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story