விருதுநகர் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முழுமையாக செயல்பாட்டுக்கு வருவது எப்போது?


விருதுநகர் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முழுமையாக செயல்பாட்டுக்கு வருவது எப்போது?
x
தினத்தந்தி 1 Jun 2019 4:15 AM IST (Updated: 1 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முழுமையாக பயன்பாட்டுக்கு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடநத் 2017–ம் ஆண்டு சிவகாசியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி ரூ. 4 கால் கோடி மதிப்பிலான நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்கப்பட்டது.

இந்த எந்திரத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கே மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. பயிற்சி பெற்ற பணியாளர்கள் நியமனம் இல்லாததால் இந்த ஸ்கேன் எந்திரத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஏழை, எளிய மக்கள் தனியார் மையங்களில் ரூ.5ஆயிரம் கட்டணம் செலுத்தி ஸ்கேன் எடுக்கும் நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2,500 கட்டணத்திலேயே எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஸ்கேன் அறிக்கை தருவதற்கு தகுதியான டாக்டர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

அருப்புக்கோட்டையில் இருந்து வாரத்துக்கு ஒருநாள் மட்டும் டாக்டர் ஒருவர் வருகை தந்து அன்றைய தினம் சில அறிக்கைகளை மட்டும் கொடுத்து செல்கிறார். இதனால் அவசரமாக தேவைப்படும் நோயாளிகள் தனியார் மையங்களுகே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரும் இது குறித்து நடவடிக்கை எடுக்க தயாரில்லை.

எந்த நோக்கத்துக்காக தமிழக அரசு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நவீன ஸ்கேன் எந்திரம் வழங்கியதோ அந்த நோக்கம் நிறைவேறாத நிலை தொடருகிறது. இது பற்றி நடவடிக்கை எடுக்க அரசு நிர்வாகிகளும் முன்வரவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து செயல்படாமல் இருந்தால் எந்திரத்தின் துல்லிய தன்மை குறைந்து விட வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்பதால் இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.


Next Story