ஓமலூர் அருகே சீராக குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்


ஓமலூர் அருகே சீராக குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஓமலூர், 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனி‌‌ஷ்பேட்டை ஊராட்சி பெரியவடகம்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் சீராக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்தனர். ஆனால் தற்போது விவசாய கிணறுகளும் வறண்டு விட்டதால் தண்ணீர் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வரும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று பெரியவடகம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே தீவட்டிப்பட்டி- பொம்மிடி ரோட்டில் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெரியவடகம்பட்டி பகுதிக்கு சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் பெண்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தீவட்டிப்பட்டி-பொம்மிடி ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story