காட்பாடி அருகே வாலிபர் அடித்துக்கொலை யார் அவர்? போலீஸ் விசாரணை
காட்பாடி அருகே வாலிபர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி,
காட்பாடியை அடுத்த கரசமங்கலம் சிங்காரெட்டியூரை சேர்ந்த சிலர் நேற்று காலை அங்குள்ள கால்வாய் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பள்ளத்தில் வாலிபர் ஒருவர் குப்புற கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார். உடனடியாக இதுபற்றி காட்பாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது பிணமாக கிடந்தவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அவருக்கு 32 வயது இருக்கும். அவருடைய தலையில் காயம் இருந்தது. மேலும் ஒரு கையில் உள்ள 5 விரல்களும் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. எனவே அவரது விரல்களை வெட்டி அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
அவர் சிவப்பு கலரில் டி-சர்ட்டும், சிமெண்டு கலரில் பேண்டும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலைசெய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story