சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி: டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது


சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி: டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2019 5:15 AM IST (Updated: 1 Jun 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கோர்ட்டு ஆஜர்படுத்தினார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் பங்களா பஸ்நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மனைவி ரம்யா, சகோதரி மாலதி ஆகியோருடன் இணைந்து பு‌‌ஷ்பா தியேட்டர் பஸ்நிறுத்தம் அருகே டிராவல் கிராப்ட் என்ற பெயரில் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமானோரை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து சென்று வந்துள்ளார். கடந்த 9 வருடங்களாக இந்த நிறுவனத்தின் மூலம் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருவதால், இதனை நம்பி திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகமும், பிறமாநிலங்களில் இருந்தும் பல்வேறு குழுக்களாகவும், குடும்பங்கள் இணைந்தும் ஏராளமானோர் லட்சக்கணக்கான ரூபாயை அவரிடம் கட்டியுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி, சகோதரி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களை பூட்டி விட்டு தலைமறைவானார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்நிலையத்தில், சுற்றுலா செல்வதாக அழைத்து சென்று பலகோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக கூறி கடந்த 26-ந்தேதி வடக்கு போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனுக்களை கொடுத்தனர். மணிகண்டன் மீது ஏராளமான புகார் மனுக்கள் குவிய தொடங்கியதை தொடர்ந்து, அவரை கைது செய்ய போலீஸ் கமி‌‌ஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து போலீசார் மணிகண்டனை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பூரில் வைத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் ஜே.எம்.1 கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு கவியரசன் முன்னிலையில் நேற்று மாலையில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைக்க, அழைத்து சென்றனர்.

தொடர்ந்து, ஏராளமானோர் புகார் மனுக்களை கொடுத்து வருகின்றனர். தற்போது மணிகண்டன் கைது செய்யப்பட்ட விவரம் தெரிந்த உடன், மேலும் பலர் புகார் கொடுக்க முன்வருவதாக தகவல்கள் வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், அவர்கள் கட்டியுள்ள பணம் எவ்வளவு என்பது குறித்த முழு தகவல்களையும் சேகரித்து வருகிறோம். இதுகுறித்து டிராவல்ஸ் உரிமையாளரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதன் பின்னரே மோசடி செய்யப்பட்ட ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதுதெரியவரும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
1 More update

Next Story