சன்னாவூரில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்
சன்னாவூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள் பரிசுகளை அள்ளி சென்றனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சன்னாவூர் கிராமத்தில் நேற்று ஊரின் தெற்குபுறம் உள்ள வயல்வெளியில் வாடிவாசல் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 375 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. சீறி வந்த காளைகளை 150 மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், நாற்காலி, மின்விசிறி, அண்டா, சமையல் பாத்திரங்கள், வெள்ளி காசுகள் மற்றும் பணம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை 8 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு மதியம் 1 மணி அளவில் முடிவடைந்தது.
Related Tags :
Next Story