தண்டவாள பராமரிப்பு பணி: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சி–மானாமதுரை பாசஞ்சர் ரெயில் இரு மார்க்கங்களிலும் ரத்து


தண்டவாள பராமரிப்பு பணி: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சி–மானாமதுரை பாசஞ்சர் ரெயில் இரு மார்க்கங்களிலும் ரத்து
x
தினத்தந்தி 1 Jun 2019 4:15 AM IST (Updated: 1 Jun 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாள பராமரிப்பு பணிக்காக திருச்சி–மானாமதுரை பாசஞ்சர் ரெயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட திருச்சி–புதுக்கோட்டை ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதற்காக அந்த பாதையில் செல்லும் ஒரு சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இந்த மாதம் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சி–மானாமதுரை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.76807/76808) இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரெயில் திருச்சியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு மானாமதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. அப்போது, மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56723) மதியம் 1.40 மணிக்கு மானாமதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. அதேபோல, மானாமதுரையில் இருந்து மதியம் 2 மணிக்கு திருச்சி செல்லும் பாசஞ்சர் ரெயில் புறப்படுகிறது. எனவே, இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் மதுரை–ராமேசுவரம் பாசஞ்சர் ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது.

அதேபோல, காரைக்குடி–திருச்சி பாசஞ்சர் ரெயில்(வ.எண்.76830) இந்த மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் காரைக்குடியிலிருந்து காலை 6.50 மணிக்கு பதிலாக காலை 6.20 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரெயில், கோட்டையூர், செட்டிநாடு, திருமயம், நமணசமுத்திரம், புதுக்கோட்டை, வெள்ளனூர், கீரனூர் மற்றும் குமாரமங்கலம் ஆகிய ரெயில்நிலையங்களில் இருந்து வழக்கமான நேரத்தை விட சுமார் ½ மணி நேரம் தாமதமாக புறப்படும்.

பாசஞ்சர் ரெயில்களின் போக்குவரத்து மாற்றத்தால், இந்த பகுதியை சேர்ந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story