காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வீட்டில் திருமணம் செய்த காதல் ஜோடி எலி மருந்தை தின்று தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டனர்.
கும்பகோணம்,
கும்பகோணம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் ரவீந்திரன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவரது மகன் சுரேஷ்(வயது 23). பி.எஸ்சி. பட்டதாரி.
கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் வண்ணங்குடியை சேர்ந்த சுவாமிநாதன் மகள் சரண்யா(23) என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், கும்பகோணத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். உறவினர்களான இவர்கள் இருவரும் கடந்த 5 வருடமாக தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த காதலுக்கு இருவரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனாலும் தங்களது காதல் எப்படியும் நிறைவேறி விடும் என்ற நம்பிக்கையில் இருவரும் தங்களது பெற்றோரின் சம்மதத்தை பெற கடுமையாக போராடினர்.
காதலர்களின் நம்பிக்கை, அவநம்பிக்கையாக மாறியது. இவர்கள் காதலுக்கு பெற்றோர் தரப்பிலும், உறவினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பே கிளம்பியது.
இதனால் மனமுடைந்த காதலர்கள் சந்தித்து பேசினர். அப்போது நாம் எவ்வளவோ முயன்றும் இருவரின் பெற்றோரும் நமது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கிறார்கள். வாழ்வில்தான் நாம் ஒன்று சேர முடியவில்லை. எனவே சாவிலாவது ஒன்று சேருவோம் என முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் சரண்யா செல்போனில் சுரேசிடம் பேசியுள்ளார். அப்போது தனது வீட்டிற்கு வருமாறு சரண்யாவை சுரேஷ் அழைத்துள்ளார். இதனையடுத்து சுரேசின் வீட்டிற்கு சரண்யா சென்று உள்ளார். அங்கு சுரேஷ் தான் தயாராக வாங்கி வைத்து இருந்த தாலி, பட்டுப்புடவை ஆகியவற்றை சரண்யாவிடம் காண்பித்தார். வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்த அவர்கள், சாவதற்கு முன்பு கணவன்-மனைவியாக சாவது என்று முடிவு செய்தனர்.
இதனையடுத்து வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து சுரேஷ், சரண்யாவிற்கு தாலி கட்டி உள்ளார். அதன்பின்னர் சுரேஷ், தான் தயாராக வாங்கி வைத்து இருந்த எலிபேஸ்ட்டை சரண்யாவுக்கு கொடுத்து சாப்பிடுமாறு கூறி விட்டு தானும் அதை சாப்பிட்டார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் காதலர்கள் இருவரும் மயங்கி விழுந்தனர்.
இந்த நிலையில் சுரேசின் நண்பர்கள் அவரை தேடி அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டிற்குள் சுரேசும், சரண்யாவும் மயங்கி கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இருவரையும் மீட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக இருவரும் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை இருவரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story