கன்னியாகுமரியில் போட்டியிட கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்தேனா? விஜயதரணிக்கு, எச்.வசந்தகுமார் பதில்


கன்னியாகுமரியில் போட்டியிட கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்தேனா? விஜயதரணிக்கு, எச்.வசந்தகுமார் பதில்
x
தினத்தந்தி 1 Jun 2019 5:00 AM IST (Updated: 1 Jun 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் போட்டியிட கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாக விஜயதரணி எம்.எல்.ஏ. கூறிய புகாருக்கு எச்.வசந்தகுமார் எம்.பி. பதில் அளித்துள்ளார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி தொகுதியில் இப்போதைய முக்கியமான பிரச்சினையாக என் கவனத்திற்கு வந்திருப்பது நாகர்கோவில் நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை ஆகும். நாகர்கோவிலில் பத்து நாட்களுக்கு ஒருமுறை, 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுகிறது. சரியான நேரத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அவசரகால தேவை என்பதால் அவசரமாக நடவடிக்கை எடுத்து மக்களின் தாகத்தை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்தபடியாக வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிப்பது எனது குறிக்கோள். அதற்கு தீர்வு காணும் வகையில் குமரி மாவட்டத்தில் நான்கு இடங்களில், அதாவது நாகர்கோவிலில் 2 இடங்களிலும், மார்த்தாண்டம், கருங்கல் பகுதிகளில் தலா ஒரு இடத்திலும் எனது வசந்த் அன் கோ கடைகளில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு இருக்கும். அதில் படித்த இளைஞர்கள் பயோ டேட்டாவை போட்டால் அதை எடுத்து சரிபார்த்து, யார் யாருக்கு என்ன பயிற்சி கொடுக்க வேண்டுமோ? அதை கொடுத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். இதன் மூலம் இந்தியாவின் முதன்மை மாவட்டமாக குமரி மாவட்டம் திகழும்.

குமரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு மக்கள் அதிக அளவு வர வேண்டும். அவ்வாறு வரும்போது பல்வேறு தரப்பினருக்கு வேலை வாய்ப்புகள் பெருகும். அதனால் சுற்றுலா மையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரியில் அதிக தங்கும் விடுதிகள் இருப்பதால் அதிலுள்ள கழிவுகள் கடலில் கலப்பதாக புகார் வந்துள்ளது. குமரி மாவட்டத்தின் கனிம வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் பல குளங்களை காணவில்லை. இருக்கின்ற குளங்களில் ஆக்கிரமிப்பு அகற்றி, ஆழப்படுத்த வேண்டும். நாங்குநேரியில் 51 குளங்கள் ஆழப்படுத்தினேன். கால்நடைகளுக்காக ஆங்காங்கே சிறு, சிறு குளங்களையும் ஏற்படுத்தினேன்.

அதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தவும், குளங்களை தூர்வாரவும் கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன். தமிழத்தில் ஒரு சீட்டு கூட கிடைக்காததால் மத்திய மந்திரி சபையில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என நினைக்கிறேன். நாங்குநேரி தொகுதியில் யார் போட்டியிடுவார்கள்? என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

வயது முதிர்ந்தவர்கள் கட்சி தலைமையை மிரட்டி ‘சீட்‘ வாங்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியது பற்றி என்னிடம் கேட்கிறீர்கள். நான் எம்.ஏ. படித்திருக்கிறேன். அதற்கேற்ப என்னுடைய வார்த்தைகள் இருக்கும். விஜயதரணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டிதான் முடிவெடுக்க வேண்டும். யாராக இருந்தாலும் கட்சி கட்டுப்பாடு வேண்டும் என்பது தான் எனது கருத்து.

நான் சீட்டு வாங்குவதற்காக யாரிடமும், எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. வெற்றிபெற வாய்ப்பில்லை என தெரிந்தும் 2014-ல் நான் இந்த தொகுதியில் போட்டியிட்டேன். அதில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றேன். எனக்கு கட்சி தான் ‘சீட்‘ கொடுத்தது.

இவ்வாறு வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

பேட்டியின் போது குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக நாகர்கோவிலில் உள்ள கோட்டார் மறைமாவட்ட ஆயர் இல்லத்துக்கு சென்ற வசந்தகுமார் எம்.பி., ஆயர் நசரேன் சூசையிடம் வாழ்த்து பெற்றார்.

Next Story