தேவூர் அருகே லாரி உரிமையாளரை பீர்பாட்டிலால் தாக்கி பணம், செல்போன் பறிப்பு 3 பேர் கைது


தேவூர் அருகே லாரி உரிமையாளரை பீர்பாட்டிலால் தாக்கி பணம், செல்போன் பறிப்பு 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் அருகே லாரி உரிமையாளரை பீர்பாட்டிலால் தாக்கி பணம், செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவூர்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் தேவூர் அருகே கத்தேரி ஊராட்சி வளையக்காரனூர் குட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் ஞானசேகரன் (வயது 35). லாரி உரிமையாளர்.

இவர் ஆந்திர மாநிலம் ஐதராபாத் பகுதியில் இருந்து தனது டாரஸ் லாரியில் குளிர்பான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்துக்கு புறப்பட்டார்.

சேலம் மாவட்டம் தேவூர் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வளையக்காரனூர் பகுதியில் வந்தபோது சாலையோரத்தில் லாரியை நிறுத்தி விட்டு அருகில் காளியம்மாள் லைன் குட்டக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் தனது லாரி நின்ற இடத்துக்கு திரும்பி வந்தார். பின்னர் லாரியில் ஏறி தூங்கினார். நள்ளிரவு 1 மணியளவில் லாரியின் இருபுற கதவுகளையும் திறந்து 3 பேர் ஏறினர். பின்னர் பீர்பாட்டிலை எடுத்து தூங்கி கொண்டிருந்த லாரி உரிமையாளர் ஞானசேகரன் தலையில் பலமாக தாக்கி விட்டு முதுகு பக்கத்தில் குத்தியுள்ளனர்.

அப்போது ஞானசேகரன் திருடன், திருடன் என சத்தமிட்டார். இதையடுத்து 3 பேரும் ஞானசேகரனின் சட்டைப்பையில் இருந்த ரூ.2500, மற்றும் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு லாரியில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட முயன்றனர்.

இதை அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து 3 கொள்ளையர்களையும் பிடித்தனர். பி்ன்னர் தேவூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தேவூர் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா மற்றும் போலீசார் வந்து 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் வினோபாஜி நகர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (29), முத்துசாமி (30), ரமேஷ் (32) என தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காயம் அடைந்த லாரி உரிமையாளர் ஞானசேகரன் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story