நாமகிரிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் சாவு


நாமகிரிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் சாவு
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

நாமகிரிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த பணியாளர் இறந்தார்.

ராசிபுரம், 

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த குணசேகரன் - தங்கம் தம்பதியினரின் மகன் ராமச்சந்திரன் (வயது 30). குணசேகரன் - தங்கம் இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதையடுத்து ராமச்சந்திரன் நாமகிரிப்பேட்டையில் உள்ள அவரது தாய் மாமன் வைரபெருமாள் என்பவரது வீட்டில் 15 ஆண்டுகளாக தங்கி இருந்து, நாமகிரிப்பேட்டை மின்வாரியம் பிரிவு 1-ல் கடந்த 4 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் நாமகிரிப்பேட்டை மின்வாரியம் பிரிவு 2-ல் வேலை பார்த்து வரும் லைன்மேன் செல்வராஜ் என்பவர் ஒடுவன்குறிச்சியில் மின்கம்பத்தில் பழுது பார்ப்பதற்காக ராமச்சந்திரனை அழைத்துச் சென்றதாக தெரிகிறது. ஒடுவன்குறிச்சி ஈஸ்வரன் கோவில் அருகிலுள்ள மின்கம்பத்தில் ஒப்பந்த தொழிலாளர் ராமச்சந்திரன் மின் கம்பத்தில் ஏறி பீஸ் போடுவதற்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ராமச்சந்திரன் மின்கம்பத்தில் உள்ள சோலார் விளக்கை பிடித்தவாறு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார். பிறகு அவரது உடலை கயிறு மூலம் கீழே இறக்கினர்.

பின்னர் மின்சாரம் தாக்கி இறந்த ராமச்சந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைத்துள்ளனர். ராமச்சந்திரனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ராமச்சந்திரன் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுபற்றி கேள்விப்பட்டதும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், குடும்பத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story