நாசவேலையில் ஈடுபட முயற்சியா? பெங்களூரு ரெயில் நிலையத்தில் கிடந்த மர்ம பொருளால் வெடிகுண்டு பீதி


நாசவேலையில் ஈடுபட முயற்சியா? பெங்களூரு ரெயில் நிலையத்தில் கிடந்த மர்ம பொருளால் வெடிகுண்டு பீதி
x
தினத்தந்தி 1 Jun 2019 5:00 AM IST (Updated: 1 Jun 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் கிடந்த மர்ம பொருளால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. வெடிகுண்டு போன்ற மர்ம பொருளை வைத்த நபர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் கிடந்த மர்ம பொருளால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. வெடிகுண்டு போன்ற மர்ம பொருளை வைத்த நபர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் நாச வேலையில் ஈடுபட முயற்சியா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெங்களூருவுக்கு பயங்கரவாதிகள் வந்து சென்றிருப்பதாகவும், அதனால் பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ரெயில், விமான நிலையங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் நேற்று காலையில் கையெறி குண்டு போன்ற மர்ம பொருள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மர்ம பொருள்

பெங்களூரு சிட்டி (கிராந்திவீரா சங்கொள்ளி ராயண்ணா) ரெயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு பீகார் மாநிலம் பாட்னாவுக்கு செல்வதற்காக சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் தயாராக இருந்தது. இதையடுத்து, அந்த ரெயிலில் செல்வதற்காக பயணிகள் ஏறி தங்களது இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், சங்கமித்ரா ரெயில் நிறுத்தப்பட்டு இருந்த தண்டவாளம் அருகே கையெறி குண்டு போன்ற மர்ம பொருள் கிடந்தது. அதாவது ரெயிலின் 1-வது பெட்டி பகுதியையொட்டி மர்ம பொருள் கிடந்தது. அதனை பார்த்த பயணிகள் வெடிகுண்டு என நினைத்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு பயணிகள் தகவல் கொடுத்தனர்.

பயணிகள் பீதி

உடனே ரெயில்வே போலீசார் விரைந்து வந்து மர்ம பொருளை கைப்பற்றினார்கள். இதனால் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு கிடைத்திருப்பதாக தகவல் பரவியது. இதன் காரணமாக ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். பின்னர் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்த அனைத்து பயணிகளும் அவசர அவசரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். மேலும் 1-வது மற்றும் 2-வது நடைமேடை பகுதியில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனா். தகவல் அறிந்ததும் ரெயில்வே கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. ரூபா, போலீஸ் சூப்பிரண்டு பீமா சங்கர், பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ரவி டி.சென்னன்னவர் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

வெடிகுண்டு தயாரிக்க பயன்படும்

அதே நேரத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சங்கமித்ரா ரெயில் முழுவதும் சோதனை நடத்தினார்கள். அதுபோல, மோப்ப நாய்கள் மூலம் அந்த ரெயில் மற்றும் சிட்டி ரெயில் நிலையம் முழுவதுமாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது பீப்...பீப்... என்ற சத்தம் வந்ததால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இறுதியில் அது பழுதான கண்காணிப்பு கேமராவில் இருந்து வந்த சத்தம் என்று தெரிய வந்தது. இதற்கிடையே போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டோ, வேறு வெடிப்பொருட்களோ கிடைக்கவில்லை. இதற்கிடையில், வெடிகுண்டு நிபுணர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த இரும்பு பொருள், கையெறி குண்டு தயாரிக்க பயன்படுவது என்பது தெரியவந்தது.

ஏனேனில் வெடிகுண்டு போல இருந்த இரும்பு பொருளுக்குள் வெடி மருந்துகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் இரும்பு பொருளுக்குள் வெடி மருந்துகளை நிரப்பி வெடிக்க செய்யலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நாட்டு வெடிகுண்டுக்கான இரும்பு தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மர்மநபர்கள் சதி திட்டம்

வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் இரும்பு பொருளை சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்ல திட்டமிட்டார்களா?, ரெயில் நிலையத்திற்குள் அதனை மர்மநபர்கள் எப்படி எடுத்து வந்தார்கள்?, ரெயில் நிலையத்தில் நாச வேலையில் ஈடுபட மர்மநபர்கள் சதி திட்டம் தீட்டினார்களா? என்பது தெரியவில்லை.

இதற்கிடையில், கைப்பற்றப்பட்ட இரும்பு பொருளை தடயவியல் ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

10 தனிப்படைகள் அமைப்பு

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயில்வே கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன், ஐ.ஜி. ரூபா, போலீஸ் சூப்பிரண்டு பீமாசங்கர், துணை போலீஸ் கமிஷனர் ரவி டி.சென்னன்னவர் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இதில் தொடர்புடைய மர்மநபர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதாவது ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பீமாசங்கர் தலைமையில் 5 தனிப்படையும், துணை போலீஸ் கமிஷனர் ரவி டி.சென்னன்னவர் தலைமையில் 5 தனிப்படையும் அமைக்கப்பட்டது. அந்த தனிப்படைகளில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட மொத்தம் 150 போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

இதுபற்றி கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக் ேமாகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரும்பு பொருள்

சிட்டி ரெயில் நிலையத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் ஒரு மர்ம பொருள் கிடந்ததை பார்த்து பயணிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ரெயில் பெட்டிக்குள் அந்த பொருள் கிடைக்கவில்லை. தண்டவாளத்தையொட்டி கிடந்தது. அது ஒரு இரும்பு பொருள் ஆகும். அதற்குள் வெடிப்பொருட்கள் எதுவும் இல்லை என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அந்த இரும்பு பொருள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆய்வறிக்கை கிடைத்த பின்பு தான், அது எந்த வகையான வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் இரும்பு பொருள் என்பது தெரியவரும். ரெயில் பெட்டிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி உள்ளது. ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் கைப்பற்றப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மர்மநபா்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சிட்டி ரெயில் நிலையம் மட்டுமின்றி மற்ற ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூருவில் பரபரப்பு

இதற்கிடையில், சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதும் சோதனை நடத்திய பின்பு 3½ மணிநேரம் தாமதமாக மதியம் 12.30 மணியளவில் பெங்களூருவில் இருந்து பாட்னாவுக்கு புறப்பட்டு சென்றது. மற்ற ரெயில்கள் தாமதம் இன்றி புறப்பட்டு சென்றது. அதே நேரத்தில் இந்த சம்பவத்தால் சிட்டி ரெயில் நிலையத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அங்கு வந்த பயணிகளை முழுமையாக சோதனை நடத்தினார்கள்.

வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கியது குறித்து சிட்டி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்டி ரெயில் நிலையம் தவிர யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், கண்டோன்மென்ட் ரெயில் நிலையங்களிலும், மெஜஸ்டிக் பஸ் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story