துறையூர் அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை, சுவர் இடிந்து விழுந்து பெண் பலி - இடிபாடுகளில் சிக்கி 12 ஆடுகளும் செத்தன


துறையூர் அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை, சுவர் இடிந்து விழுந்து பெண் பலி - இடிபாடுகளில் சிக்கி 12 ஆடுகளும் செத்தன
x
தினத்தந்தி 1 Jun 2019 4:30 AM IST (Updated: 1 Jun 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். 12 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி செத்தன.

துறையூர்,

திருச்சி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டது. 109 டிகிரிக்கு மேல் வெயில் அடித்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். சாலையில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. அத்துடன் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதுபோல், துறையூர் அருகே புதுப்பட்டி, மாராடி, கோட்டப்பாளையம் ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சுமார் 10 வீடுகள் மற்றும் கொட்டகைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.

பல இடங்களில் தகர மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு, வயல்களுக்கு நடுவே கிடந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்கம்பிகள் அறுந்து விழுந்து, நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோட்டப்பாளையம் தெற்குத்தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மனைவி செல்வி(வயது 27) மற்றும் ராசாமணி ஆகியோர் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது, பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், அவர்கள் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் ஒதுங்கி நின்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியதில் செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராசாமணி முகத்தில் அடிபட்டு துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர்கள் மேய்த்து வந்த 12 ஆடுகளும் இடிபாடுகளில் சிக்கி செத்தன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. 

Next Story