காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவியில் நீடிக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் - நாளை நடக்கிறது
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல்காந்தி நீடிக்க வலியுறுத்தி கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
கோவை,
கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காமராஜ் பவனில் உள்ள பி.ராமகிருஷ்ணன் அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி,எம்.சி.மனோகரன் தலைமை தாங்கி் பேசினார்.
முன்னாள் மேயர் காலனி ஆர்.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். ஆர்.பி.முருகேசன் வரவேற்றார். ஏ.ஆர்.சின்னையன், எச்.எம்.எஸ். ராஜாமணி, சொக்கம்புதூர் கனகராஜ், குனிசை செல்வம், லாலி ரோடு செல்வம், சின்னராஜ், ஜி.வி.நவீன்குமார், பேரூர் மயில், கராத்தே ராமசாமி, ஆர்.வெள்ளி்ங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலக முடிவு செய்து இருப்பதை எந்த ஒரு காங்கிரஸ் தொண்டராலும், நிர்வாகிகளாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியும், பா.ஜனதா கட்சியின் வெற்றியும் முழுமையாக சந்தேகத்துக்குரியது. நாட்டுக்காகவும். காங்கிரஸ் கட்சிக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரது உயர்ந்த எண்ணம் அளவிட முடியாதது.
காங்கிரஸ் தான் நேரு குடும்பம் என்ற எண்ணம் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்கள் இதயத்திலும் உள்ளது. அதை யாராலும் மாற்ற முடியாது. மோடியின் பொய்யும், புரட்டும், வேஷத்தையும் முறியடிக்க ராகுல்காந்தி தலைமையால் மட்டுமே முடியும். எங்களுக்கு ராகுல் தலைமை மட்டுமே வேண்டும்.
எனவே காங்கிரஸ் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் ராகுல்காந்தி நீடிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 முதல் மாலை 5 மணி வரை கோவையை அடுத்த இருகூரில் உள்ள காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படுகிறது.
இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் வி.விஜயகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story