அந்தியூர் அரசு பழங்குடியினர் நல மாணவர் விடுதியில், அரசுப்பணியாளர் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்


அந்தியூர் அரசு பழங்குடியினர் நல மாணவர் விடுதியில், அரசுப்பணியாளர் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 31 May 2019 10:00 PM GMT (Updated: 31 May 2019 11:17 PM GMT)

அந்தியூர் அரசு பழங்குடியினர் நல மாணவர் விடுதியில் அரசுப்பணியாளர் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு, 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள அரசுப்பணியாளர் தேர்வு குரூப்-2ஏ மற்றும் குரூப்-4 போட்டி தேர்வுகளுக்கு பழங்குடியினத்தவர்கள் தங்களை தயார்படுத்திட ஏதுவாக அந்தியூர் அரசு பழங்குடியினர் நல மாணவர் விடுதியில் இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி மையத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 50 பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெறலாம். தேர்வுகள் குரூப்-2ஏ காலையிலும், குரூப்-4 மாலையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். 50 பேருக்கு மேல் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையிலும், முன்னுரிமையின் அடிப்படையிலும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தொடர்ந்து 50 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சிக்கான கையேடுகள் அனைத்தும் பயிற்சி மையத்தில் உள்ளன.

இந்த புத்தகங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்விற்கு பயன்படுத்தி கொண்டு பயிற்சி மையத்தில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ள பழங்குடியின இனத்தவர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக 5-ம் தளத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கவேண்டும்.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி இனத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.


Next Story