சட்டவிரோதமாக ஊதியம் பிடித்தம், இ-சேவை மைய பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
சட்டவிரோதமாக ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாக கூறி இ-சேவை மைய பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிர்வாகத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 16 இடங்களில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு டேட்டா ஆபரேட்டர்களாக தற்காலிக பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் வேலை செய்து வரும் பணியாளர்கள் பணிபுறக்கணிப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோட்டில் இ-சேவை மையங்கள் முழுமையாக செயல்படவில்லை. மேலும், ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த போராட்டத்துக்கு இ-சேவை மைய பணியாளர்கள் சங்கமான யூனியன் ஆப் ஐ.டி.இ.எஸ். எம்பிளாயீஸ் அமைப்பின் மாவட்ட செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகி பொன் பாரதி கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு அளித்து பேசினார். இதுகுறித்து மாவட்ட செயலாளர் வாசுதேவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 16 இ-சேவை மையங்களில் 42 பேர் பணியாற்றி வருகிறோம். நாங்கள் பணியாற்றும் மையங்களுக்கு தமிழ்நாடு கேபிள் டி.வி. நிர்வாக தாசில்தார்தான் பொறுப்பாளராக உள்ளார். ஆனால் எங்களுக்கு ஊதியம் கொடுப்பதற்காக தனியார் நிறுவனங்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.
இ-சேவை மைய பணியாளர்களுக்கு ஒரு தனியார் நிறுவனமும், ஆதார் அட்டை பிரிவு ஆபரேட்டர்களுக்கு இன்னொரு தனியார் நிறுவனமும் நியமிக்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு மாதம் தோறும் ரூ.22 ஆயிரம் ஊதியம் வழங்கியதாக சம்பள விவரப்பட்டியலில் கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் எங்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் என்று தெரிவித்தனர். தினசரி எங்கள் வருகை கைவிரல் ரேகை பதிவு மின்னணு கருவி மூலம் பதிவு செய்யப்படுகிறது. சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கருவி வேலை செய்யாமல் இருந்தால் அன்றைய தினம் நாங்கள் பணியில் இருந்தாலும், விடுமுறை எடுத்ததாக கணக்கிட்டு சம்பளத்தை பிடித்தம் செய்து விடுகிறார்கள். இதனால் மாதம் தோறும் ஒவ்வொருவரும் சுமார் ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை இழக்க வேண்டியது உள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக எங்களிடம் இருந்து ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதை நிறுத்த வேண்டும். மேலும், எங்களது ஊதிய குறைபாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு கேபிள் டி.வி. தாசில்தாரிடம் முறையிட்டால், அவர்கள் எங்களுக்கு ஊதியம் வழங்க நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம்தான் எங்கள் ஒப்பந்ததாரர் என்று தெரிவிக்கிறார்கள். அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாத நிலையில் யாரிடம் முறையிடுவது?. எனவே அரசு நேரடியாக எங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
இ-சேவை மையங்கள் பொதுமக்களுக்கு சிறந்த சேவை செய்து வரும் மையமாக உள்ளது. இந்த மையங்களை தனியார் வசம் விடப்படுவதாக தகவல் உள்ளது. எனவே முழுமையாக இ-சேவை மையங்களை அரசு மட்டுமே நடத்த வேண்டும். மையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை மேற்கொண்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். நேற்று மாலை சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஸ்ரீராம் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
போராட்டத்தில் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story