சத்துணவு பெண் ஊழியர் கொலை வழக்கில் மின் ஊழியர் கைது


சத்துணவு பெண் ஊழியர் கொலை வழக்கில் மின் ஊழியர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2019 5:27 AM IST (Updated: 1 Jun 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு பெண் ஊழியர் கொலை வழக்கில் மின் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மீஞ்சூர்,

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சிவகாமி (வயது 35). இவர்களுக்கு மகன் உள்ளார். இந்த நிலையில் சிவகாமிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததால் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு காட்டூர் ஆரம்ப பள்ளியில் சத்துணவு சமையல் உதவியாளர் வேலை கிடைத்ததாக கூறப்படுகிறது. சிவகாமி வாயலூர் கிராமத்தில் வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சிவகாமி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது செல்போனில் பேசிய நபர்களை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொலையில் ஈடுபட்டது சென்னை கே.கே. நகர் மின்வாரிய அலுவலகத்தில் வணிக பிரிவில் உதவியாளராக வேலை செய்யும் கணபதி (34) என்பதும், அவரது சொந்த ஊர் வாயலூர் ஊராட்சி ஊரணம்பேடு கிராமம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணபதியை பிடித்து விசாரித்தனர்.
 விசாரணையில் போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

தனக்கு திருமணம் ஆகவில்லை. சிவகாமியிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். இந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். சிவகாமிக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை தெரிந்து அதை கைவிடுமாறு கேட்டு கொண்டேன். இது தொடர்பாக கடந்த மாதம் 23-ந்தேதி இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த கத்தியை தூக்கி வீசி எறிந்து விட்டு நான் தப்பிச்சென்று விட்டேன்.

அதன் பிறகு நான் எனது குடியிருப்பில் தங்கி இருந்தேன். அப்போது போலீசார் என்னை விசாரித்த போது சிவகாமி இறந்த விவரம் தெரிய வந்தது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் போலீசார் கணபதியை கைது செய்தனர்.

Next Story