இலவசமாக உணவு வழங்கும் உணவகம்
அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் ஓட்டல் அதிபர், பசி என்று வரும் வறியவர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதை ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இவர் சுமார் 80 ஆயிரம் பேருக்கு இலவசமாக உணவளித்துள்ளார்.
சாகினா ஹலால் கிரில் என்ற அந்த உணவகம், வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ளது.
பார்ப்பதற்கு மற்ற உணவகங்களைப் போலவே காட்சி அளித்தாலும், மற்ற உணவகங்களுக்கும் இதற்கும் முக்கியமான வித்தியாசம் உண்டு. அது, ‘பசிக்கிறது... ஆனால் பணமில்லை’ என்று வருவோருக்கு இலவசமாக உணவு வழங்குவதுதான்.
இந்த உணவகத்தின் உரிமையாளரான காஸி மன்னான், பாகிஸ்தானைச் சேர்ந்தவர். கடந்த 2013-ம் ஆண்டு இந்த உணவகத்தைத் தொடங்கிய நாளில் இருந்து இக்கொள்கையைப் பின்பற்றி வருவதாக அவர் கூறுகிறார்.
யாராவது, தனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் என்று கேட்டால் அவர்களுக்கு அது கொடுக்கப்படும்.
‘‘உங்களால் காசு கொடுத்துச் சாப்பிட முடியாது என்றால் எங்கள் உணவகத்துக்கு வந்து இலவசமாக சாப்பிட்டுக்கொள்ளலாம். பணம் கொடுத்துச் சாப்பிடுபவர்களுடன் சேர்ந்து நீங்கள் உணவருந்தலாம்.
நான் குழந்தைப் பருவத்தில் பட்ட கஷ்டம்தான் இந்த முடிவுக்குக் காரணம். பாகிஸ்தானில் ஒரு குக்கிராமத்தில் வளர்ந்த நான், அந்நாளில் பல நாட்கள் உணவின்றிக் கஷ்டப்பட்டிருக்கிறேன்.
உணவுக்குக் கூட வழியில்லாத பலர், உண்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று குப்பைத்தொட்டிகளில் தேடுவதைப் பார்த்திருக்கிறேன். அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன்’’ என்கிறார் காஸி மன்னான்.
இவரது தற்போதைய இலக்கு, ஆண்டுக்கு 16 ஆயிரம் பேருக்கு இலவசமாக உணவளிக்க வேண்டும் என்பதாம்.
நல்ல மனம் வாழ்க!
Related Tags :
Next Story