அகில இந்திய அளவிலான வலுதூக்கும் போட்டி: ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன்
அகில இந்திய அளவிலான வலுதூக்கும் போட்டியில் சப்-ஜூனியர், மாஸ்டர்ஸ் ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
குடியாத்தம்,
தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் மற்றும் வேலூர் மாவட்ட வலுதூக்கும் சங்கம் ஆகியவை இணைந்து அகில இந்திய அளவிலான வலுதூக்கும் போட்டிகளை வேலூர் மாவட்டத்தில் 2-வது முறையாக குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
சப்-ஜூனியர் மற்றும் மாஸ்டர்ஸ் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வலுதூக்கும் போட்டிகள் கடந்த 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது. போட்டிகளில் இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 466 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
போட்டிகளில் ஒட்டுமொத்த மாஸ்டர்ஸ் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு 190 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், மராட்டியம் 161 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், மத்தியபிரதேசம் 125 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றது.
சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு 57 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், ராஜஸ்தான் 45 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், கர்நாடகா 38 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றது.
இதேபோல் மாஸ்டர்ஸ் பெண்கள் பிரிவில் மராட்டியம் 65 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், மணிப்பூர் 53 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், அசாம் 32 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றது.
சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் கேரளா 60 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், ராஜஸ்தான் 44 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், கர்நாடகா 38 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றது.
போட்டிகளில் குடியாத்தம் சீவூரை சேர்ந்த சி.மூர்த்தி மாஸ்டர்ஸ் 2 பிரிவில் ஆண்களுக்கான சிறந்த வலுதூக்கும் வீரர் மற்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டத்தை வென்றார். அதேபோல் மாஸ்டர்ஸ் 4 பிரிவில் ஆண்களுக்கான சிறந்த வலுதூக்கும் வீரர் என்ற பட்டத்தை தமிழகத்தை சேர்ந்த ஏ.இளமுகன் பெற்றார்.
சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நரேஷ் ராம்வாத் மற்றும் பெண்கள் பிரிவில் கேரளாவை சேர்ந்த நந்தனா ஆகியோர் சிறந்த வலுதூக்கும் வீரர் பட்டத்தை வென்றனர்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு வலுதூக்கும் சங்க தலைவர் கேப்டன் தமிழ்ச்செல்வன், பொருளாளர் சிவராமலிங்கம், குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காத்தவராயன், முன்னாள் எம்.பி முகமதுசகி, வேலூர் மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், தொழில் அதிபர் அத்திகூர் ரகுமான், அரசு வக்கீல் கே.எம்.பூபதி, வலுதூக்கும் சங்க மாவட்ட செயலாளர் ஏ.இளமுருகன், துணைத்தலைவர் கள்ளூர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்நாடு வலுதூக்கும் சங்க செயலாளர் எஸ்.நாகராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story