செல்போனை தீமைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுறுத்தல்


செல்போனை தீமைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 1 Jun 2019 10:45 PM GMT (Updated: 1 Jun 2019 5:35 PM GMT)

செல்போனை தீமைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சட்ட விழிப்புணர்வு முகாமில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவுறுத்தினார்.

பெரம்பலூர்,


பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரம்பலூர் மகளிர் திட்டம் சார்பில், குன்னம் தாலுகா பேரளி கிராமத்தில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான லிங்கேஸ்வரன் தலைமை தாங்கினார். அமர்வு நீதிபதி விஜயகாந்த், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், வக்கீல்கள் சீனிவாசன், காமராஜ், துரை பெரியசாமி, அண்ணாதுரை, சங்கர், சத்தியசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி லிங்கேஸ்வரன் பேசுகையில், பொதுமக்கள் தங்களது அனைத்து பிரச்சினைகளையும் தயங்காது எவ்வித தயக்கமின்றி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகினால், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் செல்போனை நல்ல காரியத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். செல்போனால் நல்லதை விட தீமைகளுக்கு தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதை தவிர்க்க வேண்டும்.


பாலியல் வன்கொடுமைகளை களைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் ஆகியவற்றை சொல்லி கொடுக்க வேண்டும். அவ்வாறு சொல்லி கொடுத்தால் குழந்தைகளுக்கு அது பற்றி தக்க விழிப்புணர்வு ஏற்பட வழிவகுக்கும். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கிராமங்கள் தோறும் சட்ட உதவி முகாம்கள் நடத்தப்படும் என்றார். பின்னர் அவர் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று கொண்டார். முகாமில் வேப்பூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், பேரளி ஊராட்சி செயலாளர் செல்வம் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அலுவலர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இளநிலை நிர்வாக உதவியாளர்கள் நிர்மல்ராஜா, சக்கரபாணி, சமூக சட்ட தன்னார்வலர் பாலமுருகன் மற்றும் மகளிர் திட்ட அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story