தூத்துக்குடியில் துணிகரம் வியாபாரியை காரில் கடத்தி ரூ.2¼ லட்சம் கொள்ளை 8 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


தூத்துக்குடியில் துணிகரம் வியாபாரியை காரில் கடத்தி ரூ.2¼ லட்சம் கொள்ளை 8 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Jun 2019 3:00 AM IST (Updated: 2 Jun 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வியாபாரியை காரில் கடத்தி, ரூ.2¼ லட்சம் கொள்ளையடித்த 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் வியாபாரியை காரில் கடத்தி, ரூ.2¼ லட்சம் கொள்ளையடித்த 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வியாபாரி

தூத்துக்குடி தனசேகரன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 46). இவர் தனியார் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் சோப்பு, பவுடர் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கி, அவற்றை கடைகளில் விற்பனை செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவில் தனது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் தனது கைப்பையில் வியாபாரத்துக்காக ரூ.2¼ லட்சம் வைத்து இருந்தார்.

காரில் கடத்தி பணம் கொள்ளை

அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பல், அரவிந்த்குமாரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது அவர்கள் திடீரென்று அரவிந்த்குமாரை தங்களது காருக்குள் இழுத்து தள்ளினர்.

பின்னர் சிறிது தூரம் காரில் அரவிந்த்குமாரை கடத்தி சென்ற கும்பல், அவரை காருக்குள் வைத்து தாக்கியது. அரவிந்த்குமாரின் கைப்பையில் இருந்த ரூ.2¼ லட்சம் மற்றும் சுமார் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கொள்ளையடித்த கும்பல், அவரை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு தப்பி சென்றது.

8 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாபாரியை காரில் கடத்தி பணம் கொள்ளையடித்த 8 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story