முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம்


முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:15 AM IST (Updated: 2 Jun 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செல்வராஜ் எம்.பி. கலந்து கொண்டார்.

முத்துப்பேட்டை,

டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை எதிர்த்தும், திட்டத்தை கைவிடக்கோரியும் விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முத்துப்பேட்டை ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மீத்தேன், ஷேல் போன்ற எரிபொருட்களை ஹைட்ரோ கார்பன் என்கிற பொதுப்பெயரில் எடுப்பதற்கு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் எண்ணற்ற இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி நேற்று முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் யோகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, துணைச்செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செல்வராஜ் எம்.பி., விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உமேஷ்பாபு, கோவிலூர் ரவி, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் சிவசந்திரன், பிரஷ்நேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story