வாகன சோதனையில் பிடிபட்ட வாலிபரை விடச்சொல்லியதால் தகராறு: சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு கட்டிப்புரண்டு சண்டை


வாகன சோதனையில் பிடிபட்ட வாலிபரை விடச்சொல்லியதால் தகராறு: சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு கட்டிப்புரண்டு சண்டை
x
தினத்தந்தி 2 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

வாகன சோதனையில் பிடிபட்ட வாலிபரை விடச்சொல்லியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

சேலம், 

சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகன டிரைவராக பணியாற்றுபவர் ஏட்டு தங்கதுரை (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் தலைமையில் தாதகாப்பட்டி கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக நெத்திமேடு கந்தப்ப காலனியை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு பாரில் வேலை செய்து வருகிறார். அவரை வாகன சோதனையில் இருந்த போலீசார் நிற்குமாறு கூறினர்.

ஆனால் மணிகண்டன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றார். பின்னர் அவரை போலீசார் துரத்தி பிடித்து ஏன்? நிற்காமல் செல்கிறாய் என கேட்டனர். அதற்கு அவர் சரியான பதிலை தெரிவிக்காமலும், அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக பணியாற்றும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலுவின் உறவினர் என்பதால், தன்னை விட்டுவிடுமாறும் கூறியுள்ளார். அப்போது மணிகண்டன் குடிபோதையில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனிடையே மணிகண்டன், சிங்காரவேலுவுக்கு போன் செய்து தன்னை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் பிடித்து வைத்திருப்பதாகவும், என்னை விடும்படி அவர்களிடம் தாங்கள் கூறுங்கள் என தெரிவித்தார். அதன்பேரில் சிங்காரவேலு, ஏட்டு தங்கதுரைக்கு போன் செய்து மணிகண்டன் தனக்கு தெரிந்தவர் தான் எனவும், அவரை விட்டுவிடும்படி கூறியுள்ளார். அவர் தெரிவித்த பின்பும் மணிகண்டனை போலீசார் விடவில்லை.

இதையறிந்த சிங்காரவேலு ஆத்திரமடைந்து உடனடியாக நேரில் வந்து அங்கிருந்த போலீசாரிடம் மணிகண்டனை நான் சொல்லியும் ஏன்? விடவில்லை என சத்தம் போட்டதாக தெரிகிறது. இதில் தங்கதுரைக்கும், சிங்காரவேலுவுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றியதால் அவர்கள் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். மேலும் அவர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதைப்பார்த்த அங்கிருந்த போலீசார் அவர்களின் சண்டையை விலக்கி விட்டனர். இதில் காயமடைந்த சிங்காரவேலு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த மோதலுக்கு காரணமான மணிகண்டனை போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கான சான்றிதழை பெற்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலுவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.

Next Story