காதலித்து ஏமாற்றியதால் செவிலியர் தற்கொலை போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை புகார்


காதலித்து ஏமாற்றியதால் செவிலியர் தற்கொலை போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை புகார்
x
தினத்தந்தி 2 Jun 2019 3:45 AM IST (Updated: 2 Jun 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே போலீஸ்காரர் காதலித்து ஏமாற்றியதால் செவிலியர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி செவிலியரின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் முருகேஸ்வரி(வயது 22). செவிலியர். இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்து விட்டு கடந்த ஆண்டு வீட்டுக்கு திரும்பினார். முருகேஸ்வரி கல்லூரியில் படிக்கும் போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 39 வயதுடைய தலைமை காவலர் ஒருவருடன் முருகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. காதலித்த போது அந்த போலீஸ்காரர் முருகேஸ்வரியிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதனை நம்பிய முருகேஸ்வரி அந்த போலீஸ்காரரை தீவிரமாக காதலித்து வந்தார். முருகேஸ்வரி தனது படிப்பை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் முருகேஸ்வரியின் தந்தை சுப்பிரமணியன் முருகேஸ்வரிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். இதை அறிந்த முருகேஸ்வரி தான் காதலித்து வந்த போலீஸ்காரருக்கு போன் செய்து தனது வீட்டில் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும், எனவே தாங்கள் எனது தந்தையிடம் பெண் கேட்டு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். அதற்கு அந்த போலீஸ்காரர் முருகேஸ்வரியிடம் தனக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளதாகவும், நீ உனது தந்தை பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள் என்று கூறியதாக தெரிகிறது. தான் தீவிரமாக காதலித்த போலீஸ்காரருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை அறிந்து முருகேஸ்வரி மனம் உடைந்து காணப்பட்டார். போலீஸ்காரர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து தன்னை ஏமாற்றி விட்டதாக கருதி கடந்த மாதம் தூக்க மாத்திரை சாப்பிட்டு முருகேஸ்வரி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த உறவினர்கள் முருகேஸ்வரியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து காப்பாற்றினர். இந்நிலையில் முருகேஸ்வரி யாருடனும் பேசாமல் தனிமையில் காணப்பட்டார். தன்னை போலீஸ்காரர் ஏமாற்றியதை நினைத்து மனம் நொந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை முருகேஸ்வரி தனது வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தந்தை சுப்பிரமணியன், தனது மகளை செங்கல்பட்டு போலீஸ்காரர் ஒருவர் காதலித்து ஏமாற்றியதாகவும், தனக்கு திருமணம் ஆனதை அவர் மறைத்து தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், குன்னம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story