முதுமலையில் ‘தேன்கூடு' மரங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்


முதுமலையில் ‘தேன்கூடு மரங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 2 Jun 2019 3:45 AM IST (Updated: 2 Jun 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் உள்ள ‘தேன்கூடு' மரங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

மசினகுடி,

நீலகிரியில் உள்ள வனப்பகுதிகளில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி முக்கியமான ஒன்று. இந்த வனப்பகுதியில் தேக்கு, ஈட்டி, நாவல் உள்ளிட்ட பல வகையான மரங்கள் உள்ளன. மேலும் பல வகை செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இது தவிர காட்டுயானை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஆண்டுதோறும் கோடை காலத்தின் தொடக்கத்தில் முதுமலை வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் காய்ந்து விடும். மேலும் நீர் நிலைகளும் வறண்டு விடும். ஆனால் இந்த ஆண்டு முதுமலையில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

இதனால் காய்ந்து கிடந்த வனப்பகுதி மீண்டும் பசுமைக்கு திரும்பி உள்ளது. மேலும் நீலகிரியில் கோடை சீசன் நிலவி வருவதால், சுற்றுலா பயணிகளும் முதுமலைக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு வனத்துறை சார்பில் இயக்கப்படும் வாகன சவாரி மற்றும் யானை சவாரி மூலம் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளையும், இயற்கை எழில் காட்சிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள சில மரங்களில் நூற்றுக்கணக்கான தேன்கூடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தெப்பக்காட்டில் இருந்து கூடலூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ‘தேன்கூடு' மரங்கள் உள்ளன. ஒவ்வொரு மரமும் சுமார் 100 அடி உயரத்தை கொண்டுள்ளன. இந்த மரங்களின் அனைத்து கிளைகளிலும் சிறியது முதல் பெரியது வரை தனித்தனியாக தேன்கூடுகள் காணப்படுகின்றன. மரங்களில் ஆங்காங்கே இருக்கும் தேன்கூடுகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். மேலும் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இந்த மரங்களில் ஆண்டுதோறும் மே மாதம் நூற்றுக்கணக்கான தேன்கூடுகள் காணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பிட்ட நாட்கள் வரை தேன்கூடுகள் அப்படியே இருக்கும். அதன்பிறகு அந்த மரங்களை விட்டு தேனீக்கள் வேறு இடத்துக்கு பறந்து சென்றுவிடும் என்றனர்.


Next Story